ஏழு மாவட்டங்களில் ஆங்காங்கே வீசிய கடும் காற்றினால் 466 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 339 வீடுகள் சேதமடைந்துள்ளன.
நுவரெலியா, கம்பஹா, கொழும்பு, மாத்தளை, குருநாகல், காலி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே கடும் காற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 114 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரியொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
15 வீடுகள் கடுங்காற்றினால் முற்றாகச் சேதமடைந்திருப்பதுடன் 393 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இம்மாவட்டத்தில் 11 வீடுகள் முற்றாகவும் 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
கோரளைப்பற்று மத்தியில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் காற்றினால் 8 பேர் காயமடைந்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்திலேயே எட்டுப் பேர் காயமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதேநேரம் காலி மாவட்டம் பலப்பிட்டிய பிரதேசத்தில் மடுகங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவிவரும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலநிலையில் நாட்டின் சில பகுதிகளில் கடுமையான காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
எனினும், எந்தப் பகுதியில் அவ்வாறான பலத்த காற்று வீசும் என்பதைக் குறிப்பிட்டுக் கூற முடியாதென வளிமண்டலவியல் திணைக்கள கடமை நேர அதிகாரியொருவர் கூறினார்.
மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும், இப்பகுதிகளில் கடும்காற்று வீசுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
-தினகரன்
Leave a comment