பொத்துவில் பாணமையில் 800 ஏக்கர் காணி கடற்படை வசம்

இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள அரச படைகள் பெருமளவான காணிகளை கையகப்படுத்தி தமது முகாம்களை விஸ்தரித்துவருவதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

சில இடங்களில் முகாம்கள் விஸ்தரிக்கப்படுவதாகவும் இன்னும் சில இடங்களில் புதிய முகாம்களை அமைப்பதற்காக காணிகள் ஒதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன.

அரச படைகள் காணிகளை கையகப்படுத்துவதால் பெருமளவிலான குடும்பங்கள் தமது சொந்தக் குடிமனைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பாணமை வாவியை அண்டிய பகுதி

இந்த பின்னணியில், இப்போது கிழக்கே, அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்திலுள்ள பாணமை என்ற இடத்திலுள்ள வாவியையும் அதனை அண்டிய பிரதேசத்தையும் உள்ளடக்கிய சுமார் 800 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதியை கடற்படையினர் கையகப்படுத்தியுள்ளதாக பாணமை லாஹூகல பிரதேசசபைத் தலைவர் ராசையா சந்திரசேன கூறுகிறார்.

பெரும் ஹோட்டல்கள் அமைக்கும் தோரணையில் குறித்த பகுதியில் கட்டட நிர்மாணங்கள் அமைந்துவருவதாக பிரதேசசபைத் தலைவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவர்களின் தேவைக்காக கட்டட நிர்மாணங்களை அமைப்பதற்காக படையினரைப் பயன்படுத்தி அரசு தமது பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை கையகப்படுத்தி வருவதாக ராசையா சந்திரசேன தெரிவித்தார்.

முன்னர் யுத்த காலத்தில்கூட கடற்படை முகாம் எதுவும் அமைந்திராத பாணமை வாவியை அண்டிய பிரதேசத்தில் கடற்படையினர் பெரும் எடுப்பில் அமைத்துவரும் கட்டட நிர்மாணங்களால் பெருமளவிலான குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்துவிட்டதாகவும் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுவருவதாகவும் லாஹுகல பிரதேசசபைத் தலைவர் தமிழோசையிடம் கூறினார்.

இதேவேளை நாட்டின் பாதுகாப்புக்காக படைமுகாம்கள் அமைக்கப்பட்டுவருவதாக அரச தரப்பில் கூறப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-BBC tamil

Published by

Leave a comment