படகுகளில் ஏறிவிட்டால் சரி என்று பயணத்திற்கு தயாராகுபவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதன் பின்னாலான அளவிடமுடியாத சவால்களை எவரும் எண்ணிப்பார்த்து விடுவதில்லைஇலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் நாளாந்தம் உலக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன. நாளுக்கு நாள் புலத்தில் தஞ்சம் அடைவதற்காக பயணிப்பவர்களும் கைது செய்யப்படுபவர்களும் என நீண்டு செல்லும் பட்டியலுக்குள் இன்னமும் ஈழத்தமிழர்களின் அவலம் தொடர் கதையாக மாறியிருக்கின்றது.
மே 18 இன் பின்னர் இன்றுவரையில் குறைவடையா தொடர் அவலத்தினை தமிழினம் சந்தித்துவருகின்றது என்பதற்கு புலத்தில் தஞ்சம் கோரும் எம்மவர்களின் எண்ணிக்கை எடுத்துக்காட்டுவதாகத் தோற்றங்காட்டினாலும் அதனால் ஏற்பட்டு வருகின்ற பாதக நிலைமை தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டிய தேவை உணரப் பட்டிருக்கின்றது.
தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு அறிந்தோ அறியாமலோ பங்கெடுத்தவர்கள் நாட்டில் வாழ்வியலை முன்னெடுப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள் வதில் ஏற்படக்கூடிய அச்சநிலையைத் தவிர்த்துக் கொள்வதற்காக புலத்தில் தஞ்சம் கோருவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனாலும் கூட இந்த விடயத்தினைக் காரணம் காட்டி குறைந்த செலவில் புலத்தில் புகுந்து தொழில் தேட முற்படுபவர்களும் அவர்களுக்கு துணை நிற்கும் வெளிநாட்டு முகவர்களும் இன்னொரு வகையான ஆபத்தினை ஏற்படுத்த முற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
கனடா, ஆஸ்திரேலியா உட்பட்ட நாடுகளுக்குச் செல்வதற்கு ஐந்து தொடக்கம் பத்து இலட்சம் ரூபா மட்டுமே போதும் என்ற தனிப்பட்ட விளம்பரங்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டு முகவர்கள் வடக்கு கிழக்கில் முடிந்த அளவிற்கு இளைஞர்களைத் திரட்டுகின்றனர். அவர்கள் தென்னிலங்கைப் பகுதிகளின் ஊடாகவோ அல்லது இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா உட்பட்ட நாடுகள் ஊடாகவோ படகுகளின் மூலம் ஏற்றி அனுப்பப்படுகின்றனர்.
படகுகளில் ஏறிவிட்டால் சரி என்று பயணத்திற்கு தயாராகுபவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால் அதன் பின்னாலான அளவிடமுடியாத சவால்களை எவரும் எண்ணிப்பார்த்துவிடுவதில்லை. குறைந்தது ஒரு மாதம் முதல் பல மாதங்கள் வரையில் படகின் ஊடான பயணம் அமைந்துவிடும்.
பயணத்தின் போது பாரிய கடல் அலைகளை, மிக மோசமான காற்றினை அடை மழைபோன்ற இயற்கை அனர்த்தங்களை சந்தித்தே பயணத்தினை மேற்கொள்ள முடியும். படகுகளைச் செலுத்துபவர்கள் தமக்குத் தெரிந்த மட்டிலே படகுகளைச் செலுத்தினாலும் எதிர்வரக்கூடிய கடல் அடியில் காணப்படுகின்ற பாறைகளையோ நீரோட்டங்களையோ கணிக்கக்கூடிய வல்லமை பெற்றவர்களா? என்பது பாரிய சந்கேத்திற்குரிய விடயமாகும்.
படகுகளில் பயணிப்பவர்கள் கொண்டு செல்வதற்கு குறிப்பிட்ட நாட்களை அண்ணளவாக மதிப்பீடு செய்து கொண்டு செல்லக்கூடிய உணவுகள், குடிநீர், மருந்துகள் போன்றவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கூடிய அளவில் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு படகின் தன்மை அனுமதியளிக்காவிடில் அவற்றிலும் நிறைகுறைப்பு மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் கடல் பயணத்தின் போது சில நாள்கள் பல நாட்களாகி சிலமாதங்களாக பயண நாட்களின் நீடிப்புக்கள் அமைந்துவிடுவதும் உண்டு. இந்த நிலையில் கொண்டு செல்கின்ற உணவுகள், குடிநீர் தீர்ந்துவிடும் நிலையினை எட்டுகின்ற போது அடுத்தவரின் உணவினையோ தண்ணீரினையோ திருடி தமது தேவைகளை தீர்த்துக்கொள்ளவேண்டிய அவல நிலையினை பயணிகள் எதிர்கொள்கின்றனர்.
பயணத்தினை மேற்கொள்பவர்களில் பெண்கள், குழந்தைகள் அதிகளவில் உள்ளடங்குவதால் அவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் அளவிடமுடியாதவை சில பத்து மீற்றர்கள் நீள அகலம் கொண்ட படகுகளில் நூற்றுக்கணக்கானோர் பல மாதங்களை செலவிடுவதை எந்த வகைக்குள் சாதாரணவிடயமாக நோக்கமுடியும்.
இயற்கை உபாதைகள், நோய்த்தாக்கங்கள் என்பன ஏற்படுகின்றபோது அவற்றில் இருந்து மீள்வதற்கு அவர்கள் படாத பாடு பட வேண்டிய அவல நிலைகள் தோன்றுகின்றன. தொற்று நோய்த்தாக்கம் ஒருவருக்கு ஏற்பட்டால் அதன் உடனடித்தாக்கம் சில மணி நேரங்களிலேயே மற்றவர்களைச் சூழ்ந்துவிடும்.
நோயாளியை தனிமையில் பராமரிக்கவோ, மருத்துவ ஆலோசனையினைப் பெறுவதற்கோ எந்த வாய்ப்புக்களும் இருந்துவிடுவதில்லை. படகுப்பயணங்களின் போது இயற்கை அனர்த்தங்களையோ, கடல்ப்பயணத்தின் போதான சிரமங்களையோ எதிர்கொள்வதில் நெருக்கடி ஏற்படுகின்ற போது படகுகள் கடலில் கவிழ்கின்ற நிலையும் ஏற்படும்.
அதிசிறந்த நீச்சல் தெரிந்தவராக இருந்தாலும் எவ்வளவு நேரத்திற்குத்தான் நீச்சலடிக்க முடியும். பணத்தினையும் கொடுத்து உறவுகளையும் தொலைத்து பட்டினி கிடந்து நீர் அருந்தாது தாகம் காத்து அளவிட முடியாத உயிர்களை நடுக்கடலில் கொடுப்பதற்காகவா? இவ்வளவையும் இழந்தோம் என்ற கேள்விக்கான பதில்களை வெளிநாட்டு முகவர்கள் தந்து விடுவார்களா?
இத்தனையையும் கடந்து கரைகளை எட்டுகின்றபோது குறித்த நாடுகள் எம்மவர்களை ஆண்டுக் கணக்காக சிறைகளில் தடுத்துவைத்து விசாரணைகளுக்கு உட்படுத்துகின்றார்கள். அவர்களது விசாரணைகள் முற்றுமுழுதாக வந்தவர்களை எந்த வகைக்குள் உள்ளடக்கி திருப்பி அனுப்புவது என்பதாகவே அமைகின்றன. உதாரண மாக சண் சீ கப்பலில் கனடா சென்றவர்கள் மீதான விசாரணைகளும் அவதானிப்புக்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
விடுதலையானதாகச் சொல்லப்பட்டவர்கள் இன்னமும் தொடர் கண்காணிப்புக்களிலே வைக்கப்பட்டிருக்கின்றனர். அதே போல ஆஸ்திரேலியா நோக்கிச் செல்கின்றவர்கள் கிறிஸ்மஸ் தீவில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்களது எதிர்காலங்களும் பல நூறு மனித மணித்தியாலங்களும் வீணாகப்போகின்ற நிலைமை இன்னமும் தொடர்கின்றது.
வெளிநாட்டு மோகம் என்ற மிகப் பெரும் பூதத்தின் மாய வலைக்குள் சிக்கித் தவிப்பவர்கள் வெளிநாட்டு முகவர்களின் வேத மந்திரங்களை தாரக மந்திரமாகக் கொண்டு கடல்களில் உயிர்களைக் காவு கொடுப்பதுடன் எந்தக் குற்றங்களையும் செய்யாமலேயே சிறை வாழ்க்கையை அனுபவிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகின்றனர். அளவுக்கு அதிகமான அகதிகள் வருகையால் உண்மையாக தஞ்சம் வழங்க வேண்டியவர்களையும் ஏனைய வர்களுடன் ஒப்பிட்டு அவர்களையும் திருப்பி அனுப்பவேண்டிய தவிர்க்கமுடியாத நிலைமையை சர்வதேச நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.
இதன் மூலம் நம்மவர்கள் நாடு கடத்தப்படுவதால் அவர்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் தொடர்பில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இதனைவிடவும் தஞ்சம் வழங்குகின்ற நாடுகள் குடிவரவாளர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் கொள்வதற்கு பிரதான காரணமாக குறித்த நாடுகளின் பொருளாதார நிலைமையும் தாக்கம் செலுத்துகின்றது.
உலக நாடுகளின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்தாலும் நாடுகளில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைச் செலவு நாட்டிற்கான பொருளாதார நெருக்கடி என்பவற்றை கணக்கீடு செய்து தமது பொருளாதார மேம்பாட்டினை முன்னெடுக்கவேண்டிய நிலையில் குறித்த நாடுகள் உள்ளன. இவ்வாறான நிலையில் குறித்த அகதிகளின் வருகையை அங்கீகரித்தலில் தளர்வினை ஏற்படுத்துவதால் அதன் தாக்கம் எதிகாலத்தில் பெரிய அளவில் உணரப்படலாம் என்று அந்த நாடுகள் அஞ்சுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
இந் நிலையில் இவ்வாறு தஞ்சம் கோருகின்றவர்களை திருப்பி அனுப்பவோ, அவர்களை நாட்டின் உள்ளே அனுமதிக்காது தடுப்பதற்கோ அவர்கள் கடும் முயற்சிகளை மேற்கொள்வதாகவே நோக்கமுடிகின்றது. இன்னும் அளவிட முடியாத பெருமளவான நெருக்கடிகளின் மத்தியிலும் இருக்கும் சொத்துக்களை அடைவுகளாக்கியும், விலைபேசியும் சேகரிக்கும் பணத்தினை நடுக்கடலுக்கு இரையாக்கும் அவலத்தினை எம்மவர்கள் இனியும் தேடிப்போய் சுமக்கத்தான் போகிறார்களா? என்பதை காலம் தான் சொல்லவேண்டும்.
-Tamilwin
Leave a comment