இனப்பிரச்சினையில் தமிழ்ச்சமூகம் பாதிக்கப்பட்ட அளவுக்கு குறைவில்லாத வகையில் முஸ்லிம் சமூகமும் பாதிக்கப் பட்டிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார். முஸ்லிம்கள் எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடாது தீர்வில் பங்கு கேட்பது நியாயமற்ற தென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியிருப் பது ஏற்றுக்கொள்ளமுடியாத கூற்று எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு – கிழக்கு வாழ் தமிழ், தமிழ்பேசும் மக்களின் அபிலாஷைகள் பற்றி முழுமையாகத் தெரியாத மனோ கணேசன் அரசியல் இருப்புக்காவும் பத்திரிகை களில் பரபரப்புச் செய்திகள் வெளிவர வேண்டுமென்ற எண்ணத்திலும் வாய்க்கு வந்தபடி உளறுவது அர்த்தமற்றதெனவும் பைசல் காசிம் எம்.பி குறிப்பிட்டார்.
வடக்கு – கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் இந்தப் பிரச்சினையால் வேதனையைச் சந்தித்தவர்கள். அகதிகளாக, அபலைகளாக இன்னும் வாழ்ந்து வருகின்றனர். பரம்பரையாக வாழ்ந்த தமது பூர்வீகப்பூமியிலிருந்து வேரொடும் வேரடி மண்ணோடும் துரத்தப்பட்டவர்கள். உயிரிழப்புக்கள் சொத்திழப்புக்களைச் சந்தித்தவர்கள் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தில் கணிசமான முஸ்லிம் இளைஞர்கள் பங்கேற்று உயிரிழந்தமை வரலாறு. அத்துடன் போராட்ட காலங்களில் தமிழ்ச் சமூகத்துக்கு மானசீகமாக உதவி வழங்கிய முஸ்லிம்களும் இருக்கின்றனர். மலையகத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு வசிப்பிடமாகவும் கொண்ட மனோ கணேசனுக்கு இவைகள் எல்லாம் புரியாது. தமிழ்த்தேசியம், முஸ்லிம் தேசியம் என்ற சொற்களை அவர் அகராதியிலேயே படித்திருப்பார். நாங்கள் தமிழர்களுடன் ஒன்றித்து வாழ்கின்றவர்கள். எனவே இனங்களுக்கிடையிலான நல்லுறவை இவ்வாறான பேச்சுக்கள் குழப்பக் கூடாது எனவும் அவர் கூறினர்.
-தினகரன்
Leave a comment