ஐரோப்பா கிண்ணத்துக்கான 2012, இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு (இலங்கை நேரப்படி) இடம்பெற இருக்கின்றது. ஐரோப்பாவின் உதைப்பந்தாட்டத்தை தங்களது காலடியில் வைத்திருக்கும், உலக உதைப்பந்தாட்ட அணிகளுள் 1வது அணியாக அறிவிக்கப்பட்ட, கடந்த ஐரோப்பா கிண்ண சம்பியன் மற்றும் நடப்பு உலகக்கிண்ணச் சம்பியன் என்று வர்ணித்தே போகும் பலமிக்க ஸ்பெய்ன் ஐ எதிர்த்து இத்தாலி விளையாட இருக்கின்றது.
யுக்ரைன், ஒலிம்பிக் அரங்கில் அந்நாட்டு நேரப்படி இரவு 7:45 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது. சுமார் 70,000 பேர்கள் மைதானத்தில் நேரடியாக இறுதிப்போட்டியைப் பார்க்கவிருக்கின்றனர். இருநாட்டு அரசியல் தலைவர்களும் மற்றும் உலகின் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் என்று இப்போட்டியை நேரடியாக பார்த்துமகிழ யுக்ரைனில் காலடி எடுத்துவைத்திருக்கின்றனர்.
இதைவிட உலகலாவிய ரீதியில் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட விளையாட்டு இரசிகர்கள் இவ் இறுதிப்போட்டியினை தொலைக்காட்சி ஊடாக நேரடியாக பார்த்து இரசிக்கவுள்ளனர். இறுதிப்போட்டி நடப்பதற்கு முன்னரே ஊடகங்களுக்கு இரு அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் பேட்டிகள் வழங்கி இருந்தனர். இத்தாலி தளம்பாமல் இருக்கின்றது. எனினும் ஸ்பெய்ன் வீரர்கள் இத்தாலியின் முக்கிய வீரர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி தங்களது வீரர்களுக்கு எச்சரித்திருக்கின்றனர். இத்தாலி பயிற்றுவிப்பாளர் ‘எங்களுக்கு ஸ்பெய்னுடன் விளையாடுவது குறித்து எந்தக் கவலையும் இல்லை’ என உளவியல் ரீதியாக கூறி இருந்தார்.
ரியல்மட்ரிட், பார்சிலோனா அணிகளின் சிறந்த வீரர்களைக் கொண்டிருக்கின்ற ஸ்பெய்ன் எவ்வாறு தங்களது நடப்பு வெற்றிப்பட்டங்களை தக்க வைத்துக்கொள்ளப் போகின்றது என்பது இன்றைய போட்டியில் பதில் கிடைக்கும். அல்லது இத்தாலியின் தொடர் வெற்றிகள் இறுதிப் போட்டியிலும் நிகழுமாயின் இத்தாலிக்குக் கிடைக்கும் இரண்டாவது ஐரோப்பா கிண்ணமாக அது சரித்திரம் படைக்கும்.
2011 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அரை இறுதிப்போட்டியை 400 மில்லியன் இரசிகர்கள் தொலைக்காட்சி ஊடாக நேரடியாக பார்த்திருந்தனர். அப்போட்டி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இந்தியாவில் இடம்பெற்ற போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
![Euro-2012-Final-Preview-Spain-v-Italy-166679[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/euro-2012-final-preview-spain-v-italy-1666791.jpg?w=300&h=272)
Leave a comment