ஐரோப்பா கிண்ணத்துக்கான இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்ன் மற்றும் இத்தாலி ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்றிரவு நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் பலமிக்க ஜேர்மனியை இலகுவாக 2:1 என்ற கோல்வித்தியாசத்தில் இத்தாலி வெற்றியீட்டியது. 
இத்தாலியின் நம்பிக்கை நட்சத்திரமும் அவ் அணியின் தலைவருமான ‘மரியோ பலட்டொலி’ யின் தீவிர ஆட்டத்தால் இரு கோல்களை தனது நாட்டுக்காக பெற்றுக் கொடுத்து, இத்தாலியை இறுதிப் போட்டிக்கு கொண்டுவந்திருக்கின்றார். போட்டி ஆரம்பித்த 20வது நிமிடத்திலும் 36வது நிமிடத்திலும் இரு வெற்றிக்கோல்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்திருந்தார். போட்டியின் இடைவேளையில் 2:0 என்ற முன்னிலையில் இத்தாலி இருந்தது. பலம் பொருந்திய அணியாகவும் இம்முறை ஐரோப்பா கிண்ணத்தை சுவீகரிக்கும் அணியாகவும் எதிர்வுகூறப்பட்ட ஜேர்மனியின் கனவை இத்தாலி ஓரங்கட்டி இருக்கின்றது.
இத்தாலியின் முதலாவது கோலுடன் ஜேர்மனி வீரர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தனர். போட்டியின் வேகமும் விவேகமும் திசை திருபப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. 90வது நிமிடத்தில் பெனால்டியில் ஒரு கோலை ஜேர்மனி பெற்றிருந்தது. எனினும் போட்டியின் 90 நிமிடங்களும் இத்தாலியின் செல்வாக்கே ஓங்கி இருந்தது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை யுக்ரைன், கய்வ்-ஒலிம்பிக் அரங்கில் இத்தாலி-ஸ்பெய்ன் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. ஸ்பெய்ன் இருமுறை ( 1964, 2008) ஐரோப்பா கிண்ணத்தை வென்றுள்ளது. இத்தாலி ஒரே ஒரு தடவை (1968) ஐரோப்பா கிண்ணத்தை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
![Mario-Balotelli-Germany-Italy-Euro-2012-Semi-_2787257[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/mario-balotelli-germany-italy-euro-2012-semi-_278725711.jpg?w=530&h=397)
Leave a comment