நாட்டில் இனவாதம் மேலோங்கி இருக்கும் இவ்வேளையில் கிழக்குத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது

வட-கிழக்கு இணைந்த தாயகமே தமிழ்பேசும் மக்களின் பூர்வீக தேசம் என்றும் தமிழர்களின் மனங்களிலும் விடுதலை வீச்சுக்களிலும் பிரிக்க முடியாத இத்தேசத்தின் கிழக்கு மாகாணசபை கலைக்கப்படவுள்ள சூழ்நிலையில் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான வெற்றிக்கு வட மாகாணத்தில் இருந்து செல்லும் எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உப – தலைவர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் அணிதிரண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு முழுமையான வெற்றிக்கு பாடுபடுவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி தலைவரும் நகரசபை பதில் தலைவருமாகிய எம்.எம்.ரதன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட சூழ்நிலையில் அத்தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்தார்.

தேர்தலை எதிர்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது. இத்தேர்தல் நிலவரம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேந்திரனிடம் கேட்டு நிலைமைகளை அறிந்து கொண்டேன்.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை என்ற மூன்று மாவட்டங்கள் உள்ளடக்கிய கிழக்கு மாகாணசபையில் நாங்கள் வெற்றி பெற அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.

இந்த அரசாங்கம் இன்று வீழ்ச்சி பாதையில் சிதறுண்டு கிடக்கிறது. கிராமத்தில் வீழ்ச்சி, நகரத்தில் வீழ்ச்சி மாநாகரத்தில் வீழ்ச்சி மாவட்டத்தில் வீழ்ச்சி, மாகாணத்தில் வீழ்ச்சி, ஒட்டுமொத்த நாட்டில் வீழ்ச்சி, சர்வதேச ரீதியில் வீழ்ச்சி, இந்த வீழ்ச்சியினை சரிசெய்தும் ஜெனிவாவில் கிடைத்த தோல்வியில் இருந்து மீண்டெழ தன்னை  ஒர் நேர்மையான அரசு என காட்டவே மூன்று மாகாண சபைகளை கலைத்திருக்கிறது.

இதில் ஏனைய இரண்டு மாகாண சபைகளை பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. காரணம் அது சிறிலங்கா தேசத்திற்குரியது ஆனால் கிழக்கு மாகாணம் என்பது எமது தாயகத்திற்குரியது எனவே தான் இத்தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

மூன்று இன மக்கள் வாழும் இம் மாகாணத்தில் எமது இன விகிதாசாரத்துவம் குறைந்திருந்தாலும் எமது மக்கள் முழுமையாக வாக்களிக்கின்றபோது கூடுதலான ஆசனங்களை நாம் பெறமுடியும். கிழக்கு மாகாணத்தில் வாழும் எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள் மூன்று வாதங்களை சந்தித்தே தமது பணிகளை முன்னெடுக்கின்றனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டதிற்கு இது பொருந்தும்.

சிங்கள பேரினவாதிகளின் இனவாதம், சிங்கள பேரினவாதிகளின் அருவருடிகளும் தமிழினத்தை விற்று சுகபோகம் வாழ்பவர்களின் பிரதேசவாதம், மற்றும் மதவாதம் என்ற சூழ்நிலைகள் இருக்கினற்ற நேரத்தில் நாம் இத்தேர்தலை கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.

மாவிலாறில் தொடங்கிய போரில் கிழக்கு மாகாணத்தில்  தொப்பிகல கைப்பற்றி  இறுதி நடவடிக்கையில் வெற்றி பெற்ற பின்னர் கடந்த 2008ம் ஆண்டு இந்த அரசாங்கம் தேர்தலை வேகமாக நடத்தியது. அன்றைய கிழக்கு மாகாணத்தின் நிலைப்பாடுகளையும் எமது தாயகத்தில் பிரிக்கமுடியாத தன்மைகளையும் உணர்ந்து இராஜதந்திர ரீதியில் நாம் அத்தேர்தலில் போட்டியிட வில்லை.

அதனால் அங்கு அதர்மத்தில் உச்சியில் சிங்கள பேரினவாதமும், தமிழினத்தின் அருவடிகளும் எமது போராட்டத்திற்கு துரோகம் இழைத்த துரோக கும்பல்களும் ஆயுத அட்டகாசத்தால் வெற்றி பெற்றனர். ஆனால் இம் முறைமக்களின் வாக்குகளால் அவர்கள் தோற்கடிக்கப்படுவது உறுதி.

வட – கிழக்கு பிரிக்கப்பட்ட சூழ்நிலையில் நாம் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை ஆயினும் நாம் போட்டியிடவிட்டால் எமது தேசியத்திற்கு எதிரானவவர்கள் வெற்றிபெற்றுவிடுவார்கள். இதன் காரணமாகவே இத் தேர்தலில் எமது கட்சி போட்டியிட வேண்டிய தேவையுள்ளது. கடந்த கால தியாகங்களை மனதில் கொண்டு உண்மையான தேசியம் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம். என அவர் மேலும் தெரிவித்தார்.

-adaderana

Published by

Leave a comment