படகு விபத்து: இலங்கையர்கள் இல்லை; 90 பேரின் நிலைமை தெரியாது

இந்தோனேஷியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான கடல்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போயுள்ள 90 பேரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை.

பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

பல உடல்கள் கடலில் மிதந்துகொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருப்பதாக ஆஸ்திரேலியாவின் கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை, உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5 மணியளவில், அறிவித்தது.

நேற்று வியாழக்கிழமை மாலை அளவில் 110 பேர் வரையில் மீட்கப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர், ஆஸ்திரேலிய நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி வரை வேறு எவரும் மீட்கப்படவில்லை.

மீட்கப்பட்டவர்கள் அனைவரும் ஆண்கள், அவர்களில் ஒருவர் 13 வயதுச் சிறுவன் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறித்த கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலை மற்றும் அலைகளின் வேகத்தை வைத்துப் பார்க்கும்போது, மேலும் பலரை உயிருடன் மீட்கலாம் என்ற நம்பிக்கையில் அந்தப் பகுதியில் 5 விமானங்களும் 6 கப்பல்களும் இன்னும் பல படகுகளும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இலங்கையர் இல்லை

இதுவரை மீட்கப்பட்டுள்ளவர்களில் இலங்கையர் எவரும் இல்லை என்று ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் டி.எஸ்.ஜி.சமரசிங்க பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

குறித்த படகு எங்கிருந்து புறப்பட்டது என்பது தொடர்பான விபரங்கள் தன்னிடம் இல்லை என்றும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட கிறிஸ்மஸ் தீவுக்கு வடக்கே இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு தெற்காக 120 கடல்மைல் தொலைவில் உள்ள கடல்பரப்பில் கிட்டத்தட்ட 200 பேரை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த இந்தப்படகு நேற்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது.

நீரில் கவிழ்ந்து மூழ்கிக்கொண்டிருந்த படகின் முகட்டில் தத்தளித்தபடி நின்ற 40 பேர்வரையில் முதலில் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

மற்றவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் கையில் கிடைத்த பொருட்களை பிடித்தபடி தத்தளித்துக்கொண்டிருந்தபோது மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

அண்மைக் காலங்களில் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமாக ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையில், இந்தப் படகும் இலங்கையரை ஏற்றியதாக இருக்கலாம் என்றே ஆரம்பத்தில் நம்பப்பட்டது.

ஆனால் இவர்களில் இலங்கையர் எவரும் இல்லை என்று அதிகாரிகள் இப்போது உறுதிப்படுத்துகின்ற போதிலும், இந்தக் படகு எங்கிருந்து புறப்பட்டது, எப்படி மூழ்கியது என்பது தொடர்பான விபரங்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை.

கடந்த 2010 டிசம்பரில் அகதிகளை ஏற்றிய படகொன்று கிறிஸ்மஸ் தீவில் பாறையொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பரிலும் தஞ்சம் கோருவோர் கிட்டத்தட்ட 200 பேரை ஏற்றிய படகொன்று அளவுக்கதிகமான சுமை காரணமாக இந்தோனேசிய கடற்பரப்பில் மூழ்கிப்போனதாக அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை சட்டவிரோத குடியேறிகள் விவகாரம் அங்கு பெரும் சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சனையாக இருந்துவருகிறது.

-BBC/Tamil

Published by

Leave a comment