கோமா நிலையில் ஹொஸ்னி முபாரக்

-MMS

நேற்று முன்தினம் இரவு கெய்ரோவிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட ஹொஸ்னி முபாரக் ஒருசில மணி நேரங்களில் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும் இச்செய்தியை மறுத்த எகிப்திய இராணுவப் பிரிவு, முபாரக் கோமா நிலையிலேயே தற்பொழுதும் இருந்து வருவதை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

 எகிப்தின் இராணுவ அதிகாரியான ஜெனரல் மம்தா ஷஹீன் இந்த தகவலை முற்றாக மறுத்தார். அவர் மரணமடையவில்லை என்றும், அவரது உடல்நிலை மோசமடைந்து மோசமான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தி இருந்தார்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் இருந்த ஹொஸ்னி முபாரக் ஹெலிகொப்டர் மூலம் கெய்ரோவின் புறநகர் பகுதியில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அவரது இதயத் துடிப்பு நின்றுள்ளது. பின்னர் மருத்துவ சிகிச்சை மூலம் அவரது இருதயத் துடிப்பு மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு சுவாசித்தலை எளிதாக்கும் கருவி வைக்கப்பட்டுள்ளதாக ஜெனரல் மம்தவ் ஷஹீன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் முபாரக் தற்போது கோமா நிலையில் இருப்பதாக அவரது வழக்கறிஞர் பரீத் அல்தீப் குறிப்பிட்டுள்ளார்.

முபாரக்கின் மனைவி சுசான் தற்போது அவரது அருகில் இருப்பதாகவும் பரீத் அல் தீப் குறிப்பிட்டார்.

எனினும் முபாரக்கின் உடல்நிலை குறித்த செய்திகள் எகிப்து மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடியை திசைதிருப்ப இராணுவ கவுன்ஸில் இவ்வாறு நாடகமாடுவதாக ஒருசிலர் குறிப்பிட்டுள்ளனர்.

இது முபாரக்கின் எதிரிகளின் ஓர் விளையாட்டாக இருக்கலாம் என முபாரக்கின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் நேற்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதைக் காணமுடிந்தது.

Published by

Leave a comment