ஜபல் நகர் மூணாங்கட்டை மலையில் திடீரென முளைக்கும் பௌத்த விகாரை!

-Adaderana

கடந்த 2012.06.08 வெள்ளி மு.ப.11.00 மணியளவில் 64ம் கட்டை ஜபல் நகரில் அமைந்துள்ள மூணாங்கட்டை மலை தொடர்பில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி சேருவில விகாராதிபதி வண. சரணகீர்த்தி நாயக்க தேரோ தலைமையில் வந்த குழு ஒன்று இம்மலைக்கு மேல் பாரிய பௌத்த சிலை ஒன்றை வைப்பதற்கும், பௌத்த விகாரையுடன் கூடிய சில கட்டுமானங்களை அமைப்பதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இப்பௌத்த கட்டுமானங்கள் எமது மக்களின் எதிர்கால இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இப்பிரதேச மக்கள் கவலையுடன் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

சிறுபான்மை மக்களின் எதிர்கால இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையக் கூடிய இவ்விடயம் தொடர்பாக நேற்று பிரதேச சபையில் சபைத் தவிசாளர் தலைமையில் நடைபெற்ற அவசரக் கலந்துரையாடலில் சமூகத்தலைவர்கள், புத்திஜீவிகள் அனைத்து மத பெரியார்கள் கலந்து கொண்ட முக்கிய கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக பலத்த கவலையுடன், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

இங்கு தெரிவிக்கப்பட்ட முக்கிய கருத்துக்களாக,

01.  இயற்கை வளங்கள் அனைவருக்கும் பொதுவானவை. இவை மத, இன, மொழி அடையாளங்களுக்கு அப்பால் அனைவராலும் பயன்பெறத்தக்க வகையில் கையாளப்பட வேண்டும்.

02.  இது போன்று சில மத அடையாளங்களை கடந்த காலங்களில் (2003, ஏப்ரல்) ஒரு தரப்பு வைத்த போது இடம்பெற்ற கலவரங்களின் போது சுமார் 04 அப்பாவிகள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதுடன், விளைச்சலுக்கு தயாராக இருந்த வயல் நிலங்கள், மற்றும் குடியிருப்புகள் சேதப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டன. இது எமக்கு சிறந்த முன்னுதாரணமாகும்.

03.  பச்சனூர், ஜபல்நகர், சகாயபுரம், வெட்டுக்காட்டுச்சேனை போன்ற பழைய கிராமங்கள் எதிர்காலத்தில் சுவீகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் அபாய நிலை.

04.  மலையைச் சூழுவுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் புனித பிரதேசம் என்ற பெயரில் சுவீகரிக்கப்படும் அபாய நிலை.

05.  மூதூர், வெருகல், சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேவையான கருங்கல் உற்பத்தி இம்மலைகளில் இருந்தே பெறப்படுவதால் எதிர்காலத்தில் இவ்வுற்பத்தி தடைப்படும். அத்துடன் பிரதே அபிவிருத்திக்கு தேவையான எதிர்கால கருங்கல் உற்பத்திகள் மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து கந்தளாயில் இருந்து தருவிக்கும் நிலை.

06.  சுமார் 58மூ முஸ்லிம்களும் 42மூ தமிழ் மக்களும் 0.3மூ சிங்கள மக்களும் வாழும் மூதூர் பிரதேசம் எதிர்காலத்தில் சிங்களமயப்படும் நிலை.

07.  எதிர்கால சமூக நல்லுறவுகள் பாதிக்கப்படும் அபாயம்.

08.  அரசு கூறும் கிழக்கு விடுதலையின் பின்னர் அரசு கையாளும் பல்வேறு தந்திரோபாயங்கள் ஊடாக சிறுபான்மை மக்களின் காணிகள் பறிபோய்க் கொண்டிருக்கும் இந்நிலையில் இச்சிலைவைப்பு விவகாரமும் எமது இருப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

09.  அண்மையில் அரச அதிபரால் புதிதாக அமைக்கப்பட்ட வீதிகளின் இருபுறமும் குடியிருப்புக்களை ஏற்படுத்தக்கூடாது என விடுக்கப்பட்டுள்ள உத்தரவு.

எனவே இது விடயமாக அரசியல் சமூக, மத தலைவர்கள் அனைவரும் இணைந்து எமது எதிர்கால சந்ததியினரின் நலன்களை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மூதூர் அனைத்து சமூகங்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Published by

Leave a comment