சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் பெயரை நீக்கிவிட்டு தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்களின் பெயரை பொறித்ததாக தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ள சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, என்னைப்பற்றி தெரிவித்த அனைத்து கருத்துக்களும் உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்தார்.
இன்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
காத்தான்குடியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்ட சிரேஷ்ட் அமைச்சர் பௌசி, என்மீது மூன்று குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். நான் அவரின் பெயரில் இருந்த பௌசி மாவத்தையென்னும் பெயரை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பௌசி மாவத்தையெனும் பெயர் காத்தான்குடியில் கிடையாது. இங்கிருக்கும் டெலிக்கோம் வீதிக்கு எமது தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் காலமானதன் பின்னர் 2000ஆம் ஆண்டு இந்த வீதிக்கு தலைவரின் பெயரை வர்த்தமானி மூலம் அறிவித்து அந்த பெயர் பலகையை பெரிய விழாவாக செய்து திறந்துவைத்தோம். இதனை காத்தான்குடி நகரசபையும் பொதுமக்களும் இணைந்து செய்தனர்.
இந்த வீதியை 26.3.2000 யில் இந்த வீதி டாக்டர் அஷ்ரப் மாவத்தை என வர்த்தமானி அறிவித்தல் மூலம் காத்தான்குடி நகரசபை பிரகடனப்படுத்தியது.
2001 ஆம் ஆண்டு ஒரு வெள்ளிக்கிழமை திடீரென யாருக்கும் தெரியாமல் கள்ளதனமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக இருந்த மர்சுக் அகமது லெவ்வை என்பவர் அஷ்ரப் மாவத்தை என இருந்த அந்த வீதிக்கான பெயர்ப் பலகையை கழற்றி விட்டு பௌசி மாவத்தை எனும் சிறிய மட்டடையில் எழுதப்பட்ட பெயர் பலகையை அதில் தொங்கவிட்டு பின்னர் அதனை அவரே எடுத்துச்சென்றார்.
நாங்கள் பிரதேசவாதமாக என்றும் செயற்பட்டதில்லை. முஸ்லிம் சமூகத்துக்கு சேவை செய்தவர்களை என்றும் கௌரவித்துள்ளோம். வெளியிடங்களில் இருந்துவந்து சேவை செய்த பலரின் பெயர்களை வீதிகளுக்கு வைத்துள்ளோம். டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை, சேர் றாசீக் பரீத் மாவத்தை என்றெல்லாம் வைத்துள்ளோம்.
அமைச்சர் பௌசியின் பெயரையும் சூட்டவேண்டும் என்பதற்காக முதியோர் இல்ல வீதி 2 கோடி ரூபா செலவில் கொங்றீட் இடப்படுகின்றது. அந்தவேளை முடிந்ததும் அதற்கு பெரிய விழா ஒன்றை நடத்தி பௌசி அவர்களின் பெயரை சூட்டவுள்ளோம்.
அமைச்சர் பௌசியை நான் என்றும் மதிப்பவன். எந்த சூழ் நிலையிலும் அமைச்சர் பௌசியின் பெயரை மாற்றவில்லை. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமே வீதிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பௌசி மாவத்தை ஒன்று என்பது காத்தான்குடியில் இல்லை. அந்த வீதிக்கு மறைந்த தலைவர் அஷ்ரபின் பெயரைத்தான் வைத்துள்ளோம். அமைச்சர் பௌசியின் பெயரை எடுத்து விட்டுத்தான் நாங்கள் அஷ்ரபின் பெயரை வைத்துள்ளோம் என்பது முழுக்க முழுக்க தவறானதும், முஸ்லிம்கள் மத்தியல் காத்தான்குடியின் மீது தவறான கருத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
அமைச்சர் பௌசி கூறியுள்ள அடுத்த குற்றச்சாட்டு தோணாக்கால்வாய் தோண்டுவதற்கு எனக்கு 9 இலட்சம் தந்ததாக கூறியுள்ளார்.
இங்கு வெள்ள அனர்த்தம் ஏற்பட்டவேளையில் அவர் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்தார். அப்போது அவரை அழைத்து வந்து தோணாக்கால்வாயை காட்டினேன்.
அதற்கு அவர் அதை தோண்டுவதற்காக காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு 5 இலட்சம் ரூபா பணத்தினை ஒதுக்கீடு செய்திருந்தார். மாறாக அவர் என்னிடம் பணம் தரவில்லை பிரதேச செயலகத்திற்கே ஒதுக்கீடு செய்திருந்தார்.
அவர் கூறியுள்ளதுபோன்று ஒன்பது இலட்சம் வழங்வில்லை. ஐந்து இலட்சமே வழங்கியுள்ளார்.
அடுத்ததாக நான் கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்தவுடன் முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கூறியதாகவும் அமைச்சர் பௌசிதான் இதை கேட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
ஒரு அப்பட்டமான பொய்யாகும். எனக்கு முதலமைச்சர் பதவியை தருமாறே நான் கோரிநின்றேன். இதற்காக ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இது தொடர்பில் விவாதித்துள்ளேன்.
முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்யும் போது கூட நான் செல்லவில்லை இந்நிலையில் ஒரு போதும் நான் முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் முதலமைச்சர் பதவியை கோரி நின்றது உலகத்துக்கே தெரியும், இந்நிலையில் யாரும் இதை ஏற்றக்கொள்ள மாட்டார்கள் இதுவும் அமைச்சர் பௌசியின் தவறான கூற்றாகும்.
முன்பு ஒரு தடவை ஓட்டாவடியில் வைத்தும் தவறாக கருத்தை கூறியுள்ளார். அதன் பின் நான் அவரை பாராளுமன்றத்தில் வைத்து சந்தித்து நிலைமையை விளக்கிகூறினேன் என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் காத்தான்குடி நகர சபை தலைவர் எச்.எம்.அஸ்வர், பிரதி தவிசாளர் ஜெசீம், நகர சபை உறுப்பினர் பாக்கீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-adaderana
Leave a comment