ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 18ம் திகதி திங்கட்கிழமை காலை திறக்கப்படவிருந்த அபிவிருத்திப் பணிகளுக்கான நினைவுக்கல் மற்றும் பெயர்ப்பலகைகளை இனந்தெரியாத நபர்கள் நிறப்பூச்சு பூசி சேதமாக்கியுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை காலை ஏறாவூர் நகரில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பையினால் 8 கோடி ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான நினைவுக்கல் மற்றும் பெயர்ப்பலகைகள் மீதே இவ்வாறு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர்,
எனது வேண்டுகோளின்பேரில் ஏறாவூரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பையினால் வழங்கப்பட்ட 8 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஆரம்பித்துவைக்கப்படவிருந்து. அத்துடன் பூர்த்திசெய்யப்பட்ட அபிவிருத்திப் பணிகளும் இன்று மக்களிடம் கையளிக்கப்படவிருந்தன.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இவற்றின் மீது நிறப்பூச்சு பூசப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி திட்டங்கள் என்னுடைய வேண்டுகோளின் பெயரில் இங்கு ஆரம்பிக்கப்படவுள்ளதால் அதற்கான பெயர்ப்பலகைகளில் எனது பெயரை அமைச்சர் உதுமாலெப்பை இணைத்துகொண்டார்.
ஆனால் இந்த பிரதேசத்தில் இருக்கும் அரசியல்வாதியொருவர் தனது பெயரை இணைக்கவேண்டும் என விடுத்த வேண்டுகோளை அமைச்சர் உதுமாலெப்பை நிராகரித்ததன் காரணமாக இந்த சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முன்னர் குறித்த அரசியல்வாதி தன்னுடைய பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையை அவ்விடத்தில் வலுக்கட்டாயமாக அமைத்தபோதும் அமைச்சர் உதுமாலெப்பையினால் அவை அகற்றப்பட்டு இந்த நினைவுக்கல் மற்றும் பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டன.
உண்மையில் இந்த அபிவிருத்திப்பணிகள் யாரால் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் ஏறாவூர் பிரதேச மக்கள் நன்கு அறிவார்கள். அரசியலில் இருந்து எதனையும் செய்யாமல் யாரும் செய்யும் சாதனைகளுக்கு தனது பெயரை பொறித்துகொள்ளநினைக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் ஏறாவூர் மக்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான அரசியல்வாதிகள் இனியாவது விசமத்தனமான செயற்பாடுகளை விடுத்து மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.
மூலம்: adaderana
Leave a comment