நான் செய்த உதவிகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மறந்துவிட்டார்: பௌசி

நான் செய்த பல உதவிகளை பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மறந்துவிட்டார் என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான ரவூப்; ஏ மஜீதின் இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள் மத்தியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

‘எனது பெயர் காத்தான்குடியில் உள்ள வீதி ஒன்றுக்கு வைக்கப்பட்டது. எனது பெயரிலான அந்த வீதியின் பெயரை பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மாற்றியுள்ளார். பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நான் பல தரப்பட்ட உதவிகளை செய்துள்ளேன். புதிய காத்தான்குடி தோணா கால்வாயை துப்பரவு செய்ய வேண்டும். இதனால் மாரி காலத்தில் காத்தான்குடியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க முடியும். அதற்காக பணம் தாருங்கள் என நான் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக இருந்தபோது என்னிடம் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கேட்டிருந்தார்.

நான் உடனே அதற்காக 9 இலட்சம் ரூபா பணத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்தேன். இவ்வாறு பல உதவிகளை பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நான் செய்திருந்தேன். இந்த நிலையிலேயே காத்தான்குடியில் வீதி ஒன்றுக்கு எனது யெபயர் வைக்கப்பட்டிருந்தது. எனது பெயரை எடுத்து விட்டு அதை மாற்றியுள்ளார்.

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்தவுடன் ஹிஸ்புல்லாஹ்வுக்கு முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்காக எனது வீட்டில் கூட்டம் ஒன்றை கூட்டி முஸ்லிம் அமைச்சர்களிடம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவாக கையொப்பம் பெற்று அதை ஜனாதிபதியிடம் கொண்டுசென்று நானே கொடுத்தேன். அந்தக் கடிதத்தை கொடுத்து மூன்று தினங்களில் ஜனாதிபதியை சந்தித்த ஹிஸ்புல்லாஹ் நான் முதலமைச்சர் பதவி கேட்கவில்லை. அமைச்சர் பௌசியே இந்த விவகாரத்தை ஏற்படுத்தினார் என்று ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.  இவ்வாறு எல்லாம் அவருக்கு நான் உதவி செய்திருந்தேன். ஆனால் அவர் காத்தான்குடியில் எனது பெயர் வைக்கப்பட்ட அந்த வீதிக்கான எனது பெயரையே மாற்றியுள்ளார்.

இன்று நான் சிரேஷ்ட அமைச்சராக இருக்கின்றேன். பௌசியிடம் எதுவுமில்லை. அவரிடம் போய் என்ன செய்ய என பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நினைத்துக்கொண்டு எனது பெயர் வைக்கப்பட்ட  அந்த வீதியின் பெயரை அவர் மாற்றியிருக்கலாம். இவ்வாறானவர்களுக்கு உதவி செய்வதை விட எமது கட்சியின் அமைப்பாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும். எமது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களையும் அதன் முக்கியஸ்த்தர்களையும் கௌரவப்படுத்த வேண்டும்.

கடந்த 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இங்கு இவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இங்குள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் துணிந்துநின்று ஜனாதிபதிக்காக வாக்குகளை பெற்றுக்கொடுத்தனர். இனிவரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வளர்க்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவ அட்டையை பெற்று இந்தக் கட்சியில் அனைவரும் இணைந்துகொள்ள வேண்டும.; ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இந்தப் பிரதேச அமைப்பாளர் ரவூப் ஏ மஜீதின் பின்னால் நீங்கள் இங்கு அனைவரும் அணிதிரள வேண்டும்’ என்றார்.

இந்தக் கூட்டத்தில் மேல்மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌஷி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காத்தான்குடி அமைப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான ரவூப் ஏ மஜீத்,  மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் எம்.ஐ.உசனார், முக்கியஸ்த்தரும்  ஓய்வுபெற்ற ஆசிரியருமான எம்.எச்.முகம்மது, காத்தான்குடி முன்னாள் நகரசபைத் தலைவர் முகைதீன், மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர்  மர்சூக் அகமது லெவ்;வை, வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி றஹ்மத்துல்லா உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவப்பத்திரமும் வழங்கப்பட்டன.

-Tamilmirror

Published by

Leave a comment