சந்தேகம் வேண்டாமென்கிறார் செல்வேந்திரன்
தமிழர்களின் தேசிய கட்சி அமெரிக்காவின் கைப்பொம்மையாம்!
கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு, மீண்டும் அதற்கான தேர்தல் இடம் பெறுமாயின் இன்றைய முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் முதலமைச்சராகுவார். இதனையிட்டு எவரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. காரணம் கிழக்கு மண்ணில் வாழும் மூவின மக்களையும் ஒற்றுமையுடன் கட்டிக் காக்கும் ஆளுமையும், திராணியும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு உண்டு என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.
இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் அ. செல்வேந்திரன் குறிப்பிட்டார்.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மட்/பட்/துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயத்திற்கு மாடிக் கட்டிடம் அமைப்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முதற்கட்டமாக ஐம்பது இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கமைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் (13/6/2012) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்து சிறப்பித்த அ. செல்வேந்திரன் அங்கு மேலும் பேசுகையில்,
கிழக்கு மண்ணில் வாழும் இஸ்லாமிய சகோதரர்களின் உயிர்களையும் உடமைகளையும் கடந்த நான்கு வருடகாலம் காத்த பெருமைக்குரிய மகனாக முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளார்.
இன்றைய அரசியல் சூழலை சற்று ஆராய்ந்தால் நான் முன்னர் சார்ந்திருந்த, தமிழர்களின் தேசிய கட்சி என்று சொல்லப்படும் கட்சியிடம் நிலையான கொள்கை இல்லை. அவர்கள் இன்று அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருந்து கொண்டு எதை எதையோ பேசி மக்களை குழப்புகின்றனர்.
போரினால் அழிவுற்ற எமது மண்ணை மீட்க ஒரு ஆயுதம் கல்வி. இதற்காக வேண்டி யாவரும் கைகோர்த்து உழைக்க வேண்டும்.
-தினகரன்
Leave a comment