சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் நாட்டில் இரண்டு பல்க லைக்கழகங்களே இருந்தன. இதில் ஒன்று பேராதனைப் பல் கலைக்கழகம். மற்றது கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகும். அந் தக் காலகட்டத்தில் இவ்விரு பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டம் பெற்று வெளியேறியவர்கள் சமூகத்தில் உயர் பதவிகளை வகிக்கும் கணவான்களாக இருந்தார்கள். இதனால் தென்கிழக்கு ஆசியாவி லேயே ஆங்கிலத்தில் கற்றறிருந்த சர்வதேச தரத்துக்கு நிகரான கல்வி மான்களை உருவாக்கும் நாடு என்ற புகழ் இலங்கைக்கு இருந்தது.
அன்று பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டம் பெற்று வெளியேறியவர் களே அமைச்சர்களாகவும், நீதியரசர்களாகவும், சட்டத்தரணிகளாகவும், இலங்கை நிர்வாக சேவையில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளாக வும் விளங்கினார்கள். அன்று எங்கள் நாட்டுப் பல்கலைக்கழக மாண வர்கள் ஒழுக்க சீலர்களாக இருந்தார்கள். ஓரிரு வருடங்களுக்கு ஒரு தடவை அத்தி பூத்தாற்போல் பல்கலைக்கழகங்களில் சிறிய அளவி லான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்களாலும் சிரேஷ்ட பேராசிரியர்களாலும் சமரசப் பேச்சு வார்த்தைகள் மூலம் இந்த சில்லறைப் பிரச்சினைகள் பல்கலைக்கழ கங்களில் சுமுகமாகத் தீர்க்கப்படும்.
அன்று இவ்விரு பல்கலைக்கழகங்களில் இருந்து வருடம் ஒரு தடவை சுமார் 300 அல்லது 400 மாணவ மாணவியரே பட்டம் பெற்று வெளி யேறினார்கள். இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் நன் நெறியைக் கடைப்பிடித்து வருபவர்கள் என்ற பொதுவான அபிப்பிரா யம் எல்லோர் மனதிலும் வலுப்பெற்றிருந்ததனால் பட்டம் பெற்று வெளி யேறியவுடன் இவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் அரசாங்க தனி யார்த் துறைகளில் உயர் பதவிகள் காத்திருந்தன. அன்று வேலையற்ற பட்டதாரிகளை இனங்காணுவது அரிதாக இருந்தது.
1956இல் சுயபாசை மூலமான கல்வி பல்கலைக்கழகங்களில் ஆரம்பமாகி யதை அடுத்து எமது பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆங் கில அறிவு குறைய ஆரம்பித்தது. 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இலங்கைப் பட்டதாரிகளுக்கு நல்ல வரவேற்பும் வேலை வாய்ப்பும் கிடைத்தன.
அன்றைய காலகட்டத்தில் இந்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டங்களு க்கு எவ்வித மதிப்பும் இருக்கவில்லை. ஓரிரு இந்திய பல்கலைக்கழ கங்களில் பட்டம் பெற்றவர்களைத் தவிர மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளுக்கு சமூகத்திலும் அந்தளவுக்கு மதிப்பு இருக்க வில்லை.
இன்று இந்திய பட்டதாரிகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வேலை வாய்ப் புக் காத்திருக்கின்றது. அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் இந்தியப் பட்டதாரிகளே முக்கிய பதவிகளில் அமர்ந் திருக்கிறார்கள். தகவல் தொழில் நுட்பத் துறையில் பட்டம் பெற்ற இந் தியர்களுக்கு இன்று அமெரிக்காவில் நல்ல வரவேற்பும், கைநிறையச் சம்பளமும் கிடைக்கின்றது. அதேவேளையில் எமது நாட்டின் பட்ட தாரிகள் வெளிநாடுகளில் சிறிதளவேனும் மதிக்கப்படுவதில்லை.
இந்தப் பரிதாபநிலைக்கு என்ன காரணம் என்று நாம் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் இன்று எங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஒழுக்கம் சீர் குலைந்து அவற்றில் வன்முறையில் ஈடுபடும் கும்பல்களைக் கொண்ட மாணவர்களே பெரும்பாலாக இருப்பது ஒரு காரணம் ஆகும்.
எங்கள் நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதனால் அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தத்தை பரப்புவதற்காக பல்கலைக்கழகங்களில் வன்முறையை பயன்படுத்தி பல்கலைக்கழக கற்கை நெறியை உதாசீனம் செய்து தங்கள் காலத்தை யும் அரசாங்கத்தின் பணத்தையும் வீணடிக்கிறார்கள்.
பகிடிவதை என்ற பெயரில் எமது பல்கலைக்கழகங்களில் விஸ்வரூபம் எடுத்துவரும் வன்முறைகள் அங்குள்ள மாணவர்களின் நேர்மையாக சிந்தித்து செயலாற்றும் மனிதப் பண்புகளைக் கூட சீர்குலைத்திருக்கின் றது.
பொதுவாக ஒரு பல்கலைக்கழக மாணவன் தன்னை விட வயதில் குறைந்த தம்பி, தங்கையரை அன்போடு அணுகி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய தயங்கமாட்டான். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி இருக்கின்றது. பாணந்துறையில் உள்ள ஒரு சர்வ தேச பாடசாலையின் மாணவர்கள் சில தினங்களுக்கு முன்னர் சப்பிர கமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மரம் நடும் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சென்றிருந்தார்கள்.
இந்த மாணவர் குழுவில் 18 மாணவிகளும் 12 மாணவர்களும் சில ஆசிரியர்களும் இருந்தார்கள். சர்வதேச பாடசாலைகளில் எல்லா மாணவர்களும் பாடசாலைக்குள்ளும் வெளியிலும் ஆங்கில மொழியிலேயே பேசவேண்டும் என்ற ஒரு கண்டிப்பான நிபந்தனை இருக்கின்றது. இதன் மூலம் அந்த மாணவ மாணவியரின் ஆங்கில அறிவை பெரு க்குவதே இந்தப் பாடசாலைகளின் நோக்கமாக இருக்கின்றது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்குச் சென்ற இந்தப் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த அப்பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இவர்களை பொல்லுகளால் தாக்கி காயப்படுத்தி இருக்கிறார்கள். பல்கலைக்கழகத்துக்குள் ஆங்கிலத்தில் பேசியதை ஒரு குற்றமாகக் கருதியே இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் அந்த அப்பாவி மாணவ மாணவியரை இவ்விதம் கொடுமையாக தண்டித்திருக் கிறார்கள்.
இதுபோன்ற ஆங்கில எதிர்ப்பு கொள்கையை எமது பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் கடைப்பிடித்தால் பல்கலைக்கழகங்களில் எவ்விதம் ஆங்கில அறிவு தலைத்தோங்கும் என்ற கேள்வியை முன் வைக்க விரும்புகின்றோம்.
-தினகரன்
Leave a comment