அதிகரித்து வரும் வீதி விபத்துகளை மட்டுப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட உள்ள சாரதிகளுக்கு புள்ளி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் முறை இந்த வருட முடிவுக்குள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதோடு பொலிஸாரும் அறிவூட்டப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கூறினார்.
சாரதிகளின் கவனயீனத்தி னாலே விபத்துகள் அதிகரிப் பதோடு புதிய முறைமையின் மூலம் வீதி விபத்துகள் பெருமளவு குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
வாகன சாரதிகளுக்கு புள்ளி வழங்கும் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது. போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம, மோட்டார் போக்குவரத்து திணைக்களப் பணிப்பாளர் எஸ். எச். ஹேமச்சந்திர தெரிவித்தனர்.
அமைச்சர் மேலும் கூறியதாவது, முன்னர் ஒரு நாளைக்கு வீதி விபத்துக்கள் மூலம் 6 பேர் இறந்தனர். இன்று அது 8ஐ தாண்டியுள்ளது. சாரதிகளின் கவனயீனத்தினாலே வீதி விபத்துகள் அதிகரிக்கின்றன. வீதி விபத்துகளை மட்டுப்படுத்துவதற்காக புள்ளி வழங்கும் புதிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
வீதி, ஒழுங்குகளை மீறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். 24 மாதத்தினுள் 24 புள்ளிகள் சேரும் பட்சத்தில் 12 மாத காலத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படும். மீள வாகன அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு நன்னடத்தை காலம் வழங்கப்பட உள்ளதோடு இக்காலத்தில் 6 புள்ளிகள் பெற்றால் நன்னடத்தை காலம் மேலும் ஒரு வருடத்தினால் நீடிக்கப்படும்.
24 மாத காலத்தினுள் 24 புள்ளிகளைவிட குறைவாகப் பெறும் சாரதி ஒருவர் அடுத்த வருடத்தில் புள்ளி எதுவும் பெறாவிட்டால் அந்த புள்ளிகளில் 6 குறைக்கப்படும். அதற்கு அடுத்த வருடத்திலும் புள்ளிகள் எதுவும் பெறாவிடின் அவரின் சகல புள்ளிகளும் நீக்கப்படும்.
சாரதி பயிற்சி வகுப்பு நடத்தும் ஒருவர் 24 மாத காலத்தினுள் 12 புள்ளிகள் பெற்றால் அவரின் அனுமதி பத்திரம் 12 மாதங்களுக்கு ரத்துச் செய்யப்படும்.
சாரதிகள் பெறும் புள்ளிகள் பற்றிய விபரம் ஒவ்வொரு மாதமும் 10 திகதிக்கு முன்னர் பொலிஸ் திணைக்களமும் நீதிமன்றமும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும். அவை கணனியில் உட்படுத்தப்பட்டு புள்ளிகள் கணிப்பிடப்படும். 18 புள்ளிகளை தாண்டியதும் அது குறித்து கடிதம் மூலம் சாரதிக்கு அறிவிக்கப்படும்.
இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சகல ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் கணனிமயப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்டில் இந்த பணி நிறைவு செய்யப்படும். பொலிஸாரை அறிவூட்டி வருகிறோம். இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையையும் பெற்று வருகிறோம்.
இரண்டாம் கட்டத்தின் போது பொலிஸாருக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் என்றார்.
-Thinakaran
Leave a comment