சிறார்களை ஆயுதந்தாங்கிய மோதலில் பயன்படுத்தாது இருப்பது, மற்றும் அவர்களது முன்னேற்றம் ஆகிய இரு பிரச்சினைகளில், இலங்கை கண்டிருக்கும் முன்னேற்றத்தை ஐநா மன்றம் பாராட்டியிருக்கிறது.
இலங்கையை இந்த விஷயத்தில் குற்றமிழைத்து அவப்புகழ் பெற்ற நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கும் ஐ.நா மன்றம், இந்த வருடாந்திர அறிக்கையை ஐ.நா மன்ற பாதுகாப்பு கவுன்சிலிடம் சமர்ப்பித்திருக்கிறது.
இலங்கை அரசு அத்தகைய சிறார் போராளிகளாக வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதில் எடுத்த பாரிய முயற்சிகள் காரணமாக தற்போது அந்த நாடு இந்த “அவப்புகழ் பெற்ற நாடுகளின் பட்டியலில் இருந்து வெளிவந்துவிட்டது குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக ஐ.நா மன்ற தலைமைச் செயலர் கூறுகிறார். ஆனால் இன்னும் பல சிறார்கள் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கிறார்கள். புலிகள் ஆளெடுத்த சுமார் 7,000 சிறார்களில் சுமார் 1400 சிறார்களும், அரசுடன் இணைந்து இயங்கும் தமிழ்க் குழுக்களால் ஆளெடுக்கப்பட்ட ஐந்து சிறுவர்களும் இந்த காணாமல் போயிருக்கும் நபர்களில் அடங்குவர்.
ஆனால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இந்த சிறார்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை விசாரித்துக்கொண்டிருப்பதாக ஐ.நா மன்ற அறிக்கை கூறுகிறது.
இலங்கை , சிறார் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் கண்டிருக்கும் முன்னேற்றத்தை ஐ.நா மன்ற குழந்தைகள் நிதியம் ( யுனிசெப்) பாராட்டி, போர் முடிந்தத்திலிருந்து இந்த முன்னேற்றம் காணப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்று கூறியது.
இந்த கருத்துக்கள் ஐநா மன்ற குழந்தைகள் நிதியத்தின் ஆளுநர் அவையின் உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு சமீபத்தில் ஒரு பிரதிநிதிக்குழுவுக்கு தலைமை தாங்கி வந்தபோது வெளியிடப்பட்டன.
போர்க்காலத்தின் போதுகூட, இலங்கை அரசு தடுப்பூசி போடுவதற்கும், பாடசாலைகளுக்கும் பணம் அனுப்பியது மிகவும் பிரமிக்கத்தக்கது என்று கூறிய அவர், இப்போது இப்பிராந்தியத்திலேயே சிறார் சுகாதாரம் குறித்த பல புள்ளிவிவரங்களில் இலங்கை மிகவும் சிறப்பான சில புள்ளிவிவரங்களைப் பெற்றிருக்கிறது என்றார்.
யுனிசெப்பும், அரசும், வட இலங்கையில் போரின் காரணமாகப் பிரிந்த குடும்ப உறுப்பினர்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதில் ஒன்றிணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பதாக பான் கி மூன் குறிப்பிட்டார்.
ராணுவம் முன்னர் ஆக்ரமித்திருந்த பல பள்ளிக்கூடங்களிலிருந்து இப்போது விலகியிருப்பதாகக் கூறிய அவர், ஆனால் இன்னும் 15 பாடசாலைகள் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தபட்டுவருவது குறித்து தான் இன்னும் கவலை அடைந்திருப்பதாக கூறினார்.
-BBC Tamil
Leave a comment