புனித றமழானை முன்னிட்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதியமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
இன்று (13) காலை மட்டக்களப்பு சுபராஜ் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதியமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்தையொட்டி ஓத்திவைக்குமாறு
ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
நான் மாத்திரமன்றி மேல்மாகாண ஆளுனர் அலவி மௌலானா சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி போன்றோரும் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கிழக்கு மாகாணம் என்பது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாகும். இங்கு முஸ்லிம்களின் றமழான் காலம் என்பது அவர்களது புனித நாட்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபை முன் கூட்டி கலைக்கப்படுவதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையானது இன்னும் சில தினங்களில் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற சூழ் நிலையில் அதன் பதவிக்காலம் முடிவதற்கு முன் கலைப்பதற்கு எதிராக தடை விதிக்குமாறு கோரி கே.கே.பி. ரங்கன அமரசிங்க என்பவர் சட்டத்தரணி மொஹான் பாலந்திராவிற்கு ஊடாக இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதில் கிழக்கு மாகாண சபை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
10.05.2013 ஆம் திகதி கலைக்கப்பட வேண்டிய கிழக்கு மாகாண சபையை ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் முதலமைச்சரின் இணக்கத்துடன் ஆளுநர் விரைவில் கலைக்கவுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை உரிய காலத்திற்கு முன் கிழக்கு மாகாண சபையை கலைக்கக் கூடாதென கிழக்கு மாகாண சபையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி தீர்மானமொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதையும் மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகையினால் கிழக்கு மாகாண சபை முன் கூட்டி கலைப்பதை தடை செய்வதற்கான இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை வியாழக்கிழமை இடம்பெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
-adaderana
Leave a comment