29ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் வைபவம்
* 1000 தொழில் நுட்பப் பட்டதாரிகள்
* 3000 கல்வியியல் டிப்ளோமாதாரிகள்
இம்மாத இறுதிக்குள் 4 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தினகரனுக்குத் தெரிவித்தார்.
தொழில்நுட்ப பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கும் கல்வியற் கல்லூரியில் டிப்ளோமா கற்கை நெறிகளை முடித்துக் கொண்ட மூவாயிரம் பேருக்குமே எதிர்வரும் 29ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒரே மேடையில் வைத்து நியமனங்கள் வழங்கி வைக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.
இவர்களுக்கான நியமனங்களில் பாடசாலைகளும் குறிப்பிடப்படுமென அவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியிலுள்ள 17 கல்வியியற் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களே ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தமது டிப்ளோமா கற்கை நெறிகள் மற்றும் தற்காலிக ஆசிரிய பயிற்சிகளை முடித்துக்கொண்ட மூவாயிரம் பேருக்கும் தாம் கடமையாற்றப் பட வேண்டிய பாடசாலைகளின் பெயர் கள் குறிப்பிடப்பட்ட நிலையிலேயே இம் முறை நியமனக் கடிதங்கள் வழங்கப்பட வுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
டிப்ளோமா பயிற்சி நெறிகளை முடித்துக்கொண்ட மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரியின் 123 மாணவர்கள், அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியின் 127 மாணவர்கள், யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரியின் 145 மாணவர்கள், தர்கா நகர் கல்வியற் கல்லூரியின் 88 மாணவர்கள், ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் 107 மாணவர்கள் மேலும் மகாவெலி கல்வியியற் கல்லூரி, திங்குவ நில்வளவ கல்வியியற் கல்லூரி உட்பட 17 கல்வியியற் கல்லூரிகளைச் சேர்ந்த மூவாயிரம் மாணவர்களுக்கு ஆசிரியர் பதவிக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும்.
கடந்த வரவு- செலவுத் திட்டத்தின் போது, ஜனாதிபதி அவர்கள் இனிவரும் காலங்களில் ஆசிரியர் நியமனங்கள் பாடசாலைகளுடனேயே வழங்கப்பட வேண்டுமென அழுத்தமாக கூறியிருந்தார். அதன்படி இம்முறை நியமனங்கள் வழங்கப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்கள் கடமையாற்றப்பட வேண்டிய பாடசாலையின் பெயரை தெளிவாக குறிப்பிடுகிறோம்.
பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலேயே ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
நியமனம் பெறும் ஆசிரியர்கள் ஆகக்குறைந்தது ஐந்து வருடங்களாயினும் குறித்த பாடசாலையில் கடமையாற்ற வேண்டும். எவ்வித அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகாரங்களைக் கொண்ட நியமனம் பெற்றுக் கொண்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது என்பதில் ஜனாதிபதி அவர்கள் உறுதியாகவுள்ளாரெனவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
-Thinakaran
Leave a comment