இலங்கையரின் தலா வருமானம் அடுத்தாண்டில் 3000 அமெரிக்க டொலரை எட்டுமென அரசு கருதுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கின்றார். 2006 ல் 1400 அமெரிக்க டொலராக காணப்பட்ட தலா வருமாம் இவ்வாண்டில் 2836 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அனுராதபுர புதிய நகரில் மக்கள் வாணிப நிதிக் கம்பனிக் கிளையொன்றைத் திறந்துவைத்தபின் அவர் உரையாற்றும் போதே இத்தகவல்களை வெளியிட்டார்.
நாட்டினரின் தலாவருமானத்தை உயர்த்தும் நோக்கில் மாபெரும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற போது அபிவிருத்தியானது ஒரு பிரதேசத்திற்கு மட்டும் வரையறுக்கப்படாமல் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக கிராமங்களுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் வியாபிக்கப்பட வேண்டும் என திட்டமிட்டார். அதனடிப்படையில் இன்று மாபெரும் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கிராமங்களில் விவசாயம் மற்றும் ஏனைய தொழில் துறைகள் மூலம் நீடித்து நிலைக்கும் வருமானத்தப் பெறுவதன் மூலமும் தலா வருமானத்தை அதிகரிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
2005ல் மேல் மாகாணம் மொத்த உண்ணாட்டுற்பத்தியில் 57 சதவீதத்தைப் பதிவு செய்தது. எனினும் கிராமங்களில் உருவாகும் புதிய தொழில் முயற்சிகளின் பலனாக தேசிய உற்பத்தி அதிகரிப்பதால் குறிப்பிட்ட சதவீதம் 45 சதவீதமாக மாறியுள்ளது.
அடுத்து வரும் 5 ஆண்டுகளில் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய பல அபிவிருத்தித் திட்டங்கள் அமுலாக்கப்படுமெனவும் கூறினார்.
Leave a comment