பன்மைப் பதிவுள்ளோரின் ஏனைய இடங்கள் ரத்து
2013ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது.
எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு இந்த நடவடிக்கைகள் தொடரும் எனவும் ஜூலை 15ம் திகதி வரை வாக்காளர்கள் தம்மைப் பதிவு செய்துகொள்ளலாம் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்தார்.
அக்காலங்களில் கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து வாக்காளர் பதிவு விண்ணப்பங்களைப் பெற்று தாமதிக்காமல் அவற்றைப் பூரணப்படுத்தி மீள ஒப்படைக்குமாறு வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள் என தெரிவித் அவர் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில் இந்த நடவடிக்கைகளுக்கென விசேட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேற்படி இரண்டு பிரதேசங்களிலும் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய கிராம உத்தியோகத்தர்கள் இல்லாத நிலையிலேயே விசேட உத்தியோகத்தர்களை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு வாக்காளர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் தம்மைப் பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பில் இம்முறை முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்; வாக்காளர்கள் தம்மிடம் வரும் உத்தியோகத்தர்களுக்கு தமது பூரண பங்களிப்புகளை வழங்குவது அவசியம் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஜூலை 15ம் திகதி வரை வாக்காளர்களாக தம்மைப் பதிவு செய்ய முடியாது போகுமானால், அவர்கள் அந்தப்பகுதி கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அதனை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
-Thinakaran
Leave a comment