-MJ
உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு அடுத்ததாக உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றுமொரு உதைப்பந்தாட்ட தொடர்தான் யூரோ கிண்ணப் போட்டிகளாகும்.
யூரோ 2012 இன்று உதயமாகின்றது. ஐரோப்பா நாடுகளின் பலத்த போட்டி தெரிவுகளுக்கு மத்தியிலேயே யூரோ போட்டிகளுக்கும் இந்நாடுகள் தகுதி பெறுகின்றன. இந்தவகையில் ஐரோப்பா நாடுகளான போலந்து மற்றும் யுக்ரைன் ஆகிய நாடுகள் இணைந்து இத்தொடரினை நடாத்துகின்றன.
பதினாறு நாடுகளைக் கொண்டு 4 பிரிவுகளாக இடம்பெறும் இப்போட்டிகளை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துமகிழ்வர். இலங்கை அரசாங்கத் தொலைக்காட்சியும் கடந்த காலங்களில் இவ்யூரோக் கிண்ணப் போட்டிகளை நள்ளிரவைத்தாண்டியும் நேரடி ஒளிபரப்புச் செய்து இலங்கையின் உதைப்பந்தாட்ட இரசிகர்களையும் மகிழ்விக்கச் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
GMT நேரப்படி போட்டியின் நேரங்கள் எமது இணையத்தளத்தின் முன்பக்கத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இலங்கை மற்றும் GMT நேரத்திற்குமிடையில் ஐந்தரை மணித்தியால வித்தியாசத்தைக் கருத்திற்கொள்ளவும்.
உலகக் கிண்ணப்போட்டிகள் போன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் யூரோ கிண்ணப்போட்டிகள் இறுதியாக 2008ம் ஆண்டு நடைபெற்றது. ஒஸ்ரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடாத்திய இத்தொடரில் ஸ்பெய்ன் சம்பியனானது. இதுவே 2010 உலகக் கிண்ணத்தையும் சுவீகரித்திருந்தது.
தற்போதைய நிலையில் உலகின் சிறந்த அணியாக ஸ்பெய்ன் தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது. இருந்தும் ஜேர்மனியை உதைப்பந்தாட்ட வல்லுநர்கள் இம்முறை எதிர்வு கூறியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை ஆரம்பமாகும் (GMT: 18:00) யூரோ 2012 கிண்ண முதலாவது போட்டியில் போலந்து-கிறீஸ் அணிகளும் இரண்டாவது போட்டியில் (GMT: 18:45) ரஷ்யா-செக் குடியரசும் மோதுகின்றன. இதுவரை இடம்பெற்ற யூரோ இலட்சினைகளில் இவ்வருட இலட்சினைதான் பெரும்பாலான மக்களை ஈர்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
![800px-UEFA_Euro_2012_BaseCamps_City[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/800px-uefa_euro_2012_basecamps_city11.png?w=318&h=205)
![euro2012-logo1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/euro2012-logo11.jpg?w=131&h=150)
Leave a comment