அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மட்டக்களப்பில்

மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இன்று (04) திங்கட்கிழமை காலை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இவ் விஜயத்தின் போது, கடந்த வருட நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களைப் பார்வையிடுவதுடன் கித்துள் மற்றும் உறுகாமம் குளங்களையும் பார்வையிடவுள்ளார்.

இன்றைய உயர்மட்டக் கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், சிறுவர் மற்றம் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன், நீர்ப்பாசன அமைச்சரின் பொறியியல் ஆலோசகர் எச்.எஸ்.சோமசிறி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசனப் பொறியலாளர் மோகன்ராஜ், மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் கடந்த கால திட்டங்கள் தொடர்பான தற்போதைய அபிவிருத்தி நிலைகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.

இதேவேளை, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, மட்டு. மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசனப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் தேவைப்பாடுகள் குறித்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது மாவட்டத்தில் பெரிய நீர் பாய்ச்சல் குளங்களாக கித்துள்குளம் மற்றும் உறுகாமம் குளம் ஆகியவற்றினை ஒன்றாக இணைத்து புனரமைப்பு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதனை புனரமைப்பு செய்வதன் மூலம் இப்பிரதேசத்தை சேர்ந்த மேலும் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

Published by

Leave a comment