மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் தாதியர் வெற்றிடங்களுக்கு இலங்கையிலிருந்து தாதியர்களை அனுப்பும் பொருட்டு அவர்களுக்குத் தேவையான நவீன பயிற்சியினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தாதியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றினையும் மருத்துவமனை ஒன்றினையும் நிர்மாணிப்பதற்காக சவூதி அரேபிய நிறுவனம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கை வெளி நாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதிகார சவூதி அரேபியாவின் முன்னணி நிறுவனம் ஒன்றான சவூதி அரேபிய முதலீட்டுக் கம்பனியின் நிறைவேற்று முகாமையாளர் டொக்டர் மொஹமட் அசினுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
இதன் பிரகாரம் சவூதி அரேபிய முதலீட்டுக் கம்பனி இலங்கையில் நிர்மாணிக்கப்படும் இந்த தாதியர் பயிற்சிக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என்பவற்றிற்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தொகையினை முதலீடு செய்ய உள்ளதாக அமல் சேனாலங்காதிகார மேலும் தெரிவித்தார்.
100 படுக்கைகளைக் கொண்ட மேற்படி மருத்துவமனையுடன் நவீன வசதிகளைக் கொண்ட ஆய்வுகூடம் ஒன்றும் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இத்தாதியர் பயிற்சிக் கல்லூரியின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு அமெரிக்க தாதியர் கல்லூரி ஒன்றின் உதவி பெறப்பட உள்ளதுடன், அதன்படி இங்கு பயிற்சியினை பூர்த்தி செய்யும் தாதியர்கள் அமெரிக்க மருத்துவமனைகளுக்கும் உயர் சம்பளத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதிகார வலியுறுத்தினார்.
-Thinakaran
Leave a comment