மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கவேண்டும். அதனைவிடுத்து அரசியல்வாதிகளின் அட்டவணைகளின் படி நியமனங்கள் வழங்கப்படுமானால் அதற்கெதிராக சாத்வீக ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, விவேகானந்தா கல்வி நிலையத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் வை.பிரதீபன் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிடல் திணைக்களத்துக்கான பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை அடுத்த வாரம் இடம்பெறும் என மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.
நாங்கள் அவரை சந்தித்து மட்டக்களப்பில் பட்டததாரிகள் இன்றைய நிலை அரசியல்வாதிகளின் அட்டவனையின் அடிப்படையில் நியமனங்களை வழங்காது ஆண்டின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கவேண்டும் என கோரியிருந்தோம்.
எனினும் அவ்வாறு வழங்கமாட்டாது என அவர் உறுதியளித்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளின் நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் கதைத்துள்ளதாகவும் அவர் அனைவருக்கும் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
2004 – 2009ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்கள் அனைவருக்கும் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் ஆனால் தமக்கு அதிகளவான பட்டதாரிகள் தேவையாகவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் எம்மிடம் தெரிவித்துள்ளார்.
உண்மையில் எமது பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எமது சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அவர் எமக்கு வழங்கியுள்ள உறுதிமொழிகள் எமக்கு புது உத்வேகத்தை தந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளாகிய நாங்கள் ஒன்றுபட்ட சக்தியாக வெளிப்படுவதன் மூலமே எமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளமுடியும். அத்துடன் சங்கத்தினை எவ்வளவுக்கு நாங்கள் பலப்படுத்துகின்றோமோ அந்தளவுக்கு எமக்கு பாரிய வெற்றியை எட்டமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
-adaderana
Leave a comment