-MJ
நாளை வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஹம்பாந்தோட்டை-மஹிந்த ராஜபக் ஷ சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் தமது தொடரின் முதலாவது இருபது20 சர்வதேச போட்டியில் மோத இருக்கின்றன.
பாகிஸ்தான் ஓர் நிறைவான, நீண்ட தொடரை இலங்கை அணியுடன் இலங்கையில் விளையாட இருப்பது விளையாட்டு இரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விடயமாகும். இத்தொடரில் இரண்டு இருபது 20 சர்வதேச போட்டிகளும் ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளும் மற்றும் மூன்று டெஸ்போட்டிகளும் இடம் பெற இருக்கின்றன.
இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் சுமார் 2 மாதங்களாக தங்களை அர்ப்பணித்து களைப்பாலும் உளவியல் தாக்கங்களாலும் மற்றும் சம்பள நிலுவைப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை அணியை எதிர்த்தாட, நீண்ட நாள் ஓய்வின் பின்னர் புதுப்பொழிவுடன் பாகிஸ்தான் அணி இலங்கையில் காலடி வைத்துள்ளது. பாகிஸ்தான் இருபது 20 அணிக்கு முகமட் ஹபீஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் தனது முதலாவது அணித்தலைவர் பதவியை பரீட்சிக்க இத்தொடர் அவருக்கு ஓர் வாய்ப்பாகஅமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை பாகிஸ்தான் அணிகள் சர்வதேச கிரிக்கட் வரலாறுகளில் 1981ல் முதன் முதலாக கராச்சியில் சந்தித்திருந்தன. சர்வதேச இருபது 20 போட்டிகளில் முதன்முதலில் ஜொஹன்ஸ்பேர்க்கில் (தென் ஆபிரிக்கா) 2007 இருபது 20 உலகக்கிண்ணப் போட்டிகளில் சந்தித்திருந்தன. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 33 ஓட்டங்களால் இலங்கையை வெற்றி பெற்றது. இறுதியாக விளையாடிய போட்டி அபுதாபியில் 2011 நவம்பரில் நடைபெற்றது. இதிலும் பாகிஸ்தான் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை இலங்கை-பாகிஸ்தான் ஆகிய அணிகள் சந்தித்த 7 சர்வதேச இருபது20 போட்டிகளில் பாகிஸ்தான் 5 போட்டிகளிலும் இலங்கை 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று, பாகிஸ்தான் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சில மாற்றங்களுடன் புதுப்பொழிவுடன் நாளை களமிறங்கும் பாகிஸ்தான் அணியை தமது சொந்த மண்ணில் இலங்கை அணி எவ்வாறு எதிர்த்தாடும் என்பது இலங்கை இரசிகர்களின் எதிர்பார்ப்பு!

Leave a comment