ஊடகவியலாளர்கள் மீதான அரசியல்வாதிகளின் கைவேட்டை:தாக்கியவர்களை சட்டத்தின்முன் நிறுத்துங்கள்

யுத்தகாலம் தொட்டு இன்றுவரை இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்டுவரும் மிரட்டல்கள், அரசியல் கைவரிசை, அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்கள் போன்றன இன்னும் குறைந்தபாடில்லை. இந்தவகையில்அட்டாளைச்சேனையில் ஊடகவியலாளர் ஒருவர் கடமையின்போது அரசியல்வாதி ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவமும் கொழும்பில் ஊடகவியலாளர் இரண்டுபேரை அவர்களது கடமைகளை செய்யவிடாது பொலிஸார் தடுத்தமையும் ஊடக ஜனநாயக உரிமை மீறல் என இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“அட்டாளைச் சேனையில் 28.-05-2012 ஆம் திகதி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற சுடர் ஒளி நாளேட்டின் பிராந்திய செய்தியாளர் எஸ்.எம்.அரூஸ், பிரபல அரசியல்வாதி ஒருவரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

செய்தியாளர்களை தாக்குவதற்கும் அவர்களின் கடமைகளை செய்யவிடாமல் தடுப்பதற்கும் அரசியல்வாதிகளுக்கு எந்தவிதமான உரிமைகளும் இல்லை. செய்தியாளர்கள் எழுதும் செய்திகளில் பிழைகள் முரண்பாடுகள் இருந்தால் அது தொடர்பாக அவர்கள் குறித்த செய்தி நிறுவனத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்க முடியும்.

ஆனால் அரசியல்வாதிகளில் பலர் தங்கள் மீது குற்றங்களையும், தவறுகளை வைத்துக்கொண்டு செய்தியாளர்களை தாக்குவதும், ஏசுவதும் நாகரீகமற்ற செயல் ஊடகவிலாளர்கள் தங்கள் ஒழுக்கவிதிகளுக்கு அமைவாகவே செயற்படுகின்றனர்.
ஆகவே சம்பவம் தொடர்பாக குறித்த அரசியல்வாதி மன்னிப்புகோர வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறமல் இருப்பதை அவர் உறுதிசெய்ய வேண்டும் என ஒன்றியம் வினயமாக கேட்டுக்கொள்கின்றது.

27-05-2012 ஆம் திகதி கொழும்பு தெஹிவளை பள்ளிவாசல் விடயம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற வீரகேசரி நாளேட்டின் சகோதர ஏடான வடிவெள்ளி நாளிதழின் செய்தியாளர்களான எஸ்.என்.எம்.சுகைல், எம்.எப்.எம்.பசீர் ஆகியோர் பொலிஸாரினாலும் சில மத தலைவர்களினாலும் கடமைகளை செய்யவிடாது தடுக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஊடகத்துறை மீது தொடர்ந்தும் தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் இடம்பெறுகின்றது என்பதையே குறித்த இரு சம்பவங்களும் எடுத்துக்காட்டுகின்றன. எனவே ஊடகத்துறை அமைச்சர் இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தி உரியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

Published by

Leave a comment