இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தம்: கைச்சாத்திட வீரர்கள் தயக்கம்!

புதிய ஒப்பந்தத்திற்கு முன்னர் நிலுவை தொகையை தரும்படி கோரிக்கை

‘இலங்கை வீரர்களுக்கான ஒப்பந்தத்தின் படி வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடினால் 5000 டொலர்களும் ஒரு நாள் போட்டிக்கு 3500 டொலரும் இருபது – 20 போட்டிக்கு 3000 டொலரும் மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படும். அதேபோன்று தேசிய வீரர் ஒருவர் உள்நாட்டு போட்டியில் விளையாடுவதற்கு 50 வீத போட்டிக்கட்டணம் வழங்கப்படும்’.

இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் வீரர்கள் கைச்சாத்திடுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்திற்கமைய வீரர்கள் சம்பளம் முழுமையாக வழங்கப்படாத நிலையில் புதிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படு த்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகும் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்திற்கு முன்னர் வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இந் நிலையில் இலங்கை கிரிக்கெட் நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்காத பட்சத்தில் வீரர்கள் புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுப்பு தெரிவிப்பார்கள் என இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சம்மேளன பிரமுகர் கென்டி அல்விஸ் குறிப்பிட்டார். இவர் வீரர்கள் ஒப்பந்தம் குறித்து இலங்கை கிரிக்கெட்டுடன் கிரிக்கெட் வீரர்கள் சம்மேளனம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

“முந்தைய ஒப்பந்த நிலுவைகள் தீர்க்கப்படும் வரை புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் வாய்ப்பு இல்லை என இலங்கை கிரிக்கெட்டுக்கு அறிவித்துள் ளோம்” என்று கென்டி அல்விஸ் குறிப்பிட்டார். எனினும் சம்பள நிலுவைகள் விரைவில் வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கென்டி அல்விஸ் கூறும்போது, அவர்கள் மே மாத முடிவுக்குள் சம்பள நிலுவையின் குறிப்பிடத்தக்க தொகையை வழங்குவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அது முடிவடைவதற்கு ஒரு சில தினங்களே இருக்கிறது. அவர்கள் ஆசிய கிண்ண போட்டியில் விளையாடியதற்கான சம்பளத்தை வழங்க திட்டமிட்டிருந்தனர்.

எனினும் அது எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் அதனை விரைவில் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். அதனால் தான் இந்த மாத இறுதி வரை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

வீரர்கள் ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதியுடனேயே முடிவடைந்தது. எனினும் கடந்த ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னரான சம்பளத்தையே இலங்கை கிரிக்கெட் வழங்கியுள்ளது. இன்னும் குறிப்பிடத்தக்க தொகையை இலங்கை கிரிக்கெட் வழங்க வேண்டியுள்ளது. எனவே அவை தீர்க்கப்படும் வரை புதிய ஒப்பந்தத்தில் வீரர்கள் கைச்சாத்திடமாட்டார்கள் என அல்விஸ் குறிப்பிட்டார்.

இதில் கடந்த பெப்ரவரியில் நடந்த ஆசிய கிண்ண போட்டி மற்றும் இங்கிலாந்து சுற்றுப் பயணம் ஆகியவற்றுக்கான சம்பளங்கள் வீரர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என கென்டி அல்விஸ் சுட்டிக்காட்டினார்.

இலங்கை வீரர்களுக்கான ஒப்பந்தத்தின் படி வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடினால் 5000 டொலர்களும் ஒரு நாள் போட்டிக்கு 3500 டொலரும் இருபது – 20 போட்டிக்கு 3000 டொலரும் மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படும். அதேபோன்று தேசிய வீரர் ஒருவர் உள்நாட்டு போட்டியில் விளையாடுவதற்கு 50 வீத போட்டிக்கட்டணம் வழங்கப்படும்.

வீரர் ஒருவர் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர் தொடர் ஆரம்பிப்பதற்கு 14 தினங்களுக்கு முன்னர் பயிற்சிகளுக்கு சமுகமளிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் வீரர் ஒருவர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுக்கும் பட்சத்தில் அவருக்கு இலங்கை கிரிக்கெட்டின் மருத்துவ உதவி உட்பட எந்த சலுகையும் வழங்கப்படமாட்டாது.

Published by

Leave a comment