கல்விக் கல்லூரிகளின் தற்போதைய மூன்று வருட டிப்ளோமா பாடநெறியினை கற்கை காலத்தினை நான்கு வருடங்களாக அதிகரித்து பட்டதாரிகளாக ஆக்குவதற்கான யோசனையொன்றினை நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட கல்வி ஆணைக்குழுவுக்கு முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று கல்லூரியின் தலைவர் ஏ.எல்.ஏ. ரசூல் தலைமையில் இடம்பெற்றது.
கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் – விசேட அதிதியாகக் கலந்து உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறுகையில்,
‘கல்விக் கல்லூரிகளில் கற்போரின் கற்கைக் காலத்தினை நான்கு ஆண்டுகளாக அதிகரிக்கும் ஒரு யோசனையை விசேட கல்வி ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளோம்.
இதன் மூலமாக கல்விக் கல்லூரிகளில் கற்போர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோடு தேவையானதொரு வலையமைப்பினை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பட்டதாரிகளாக வெளியேற முடியும்.
இதற்கான பாடநெறி மாற்றத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனும் சிபாரிசினையே நாம் முன்வைத்துள்ளோம்’ என்றார்.
இந்நிகழ்வில், கல்லூரியின் ‘மிர்ஆ’ எனும் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த விழாவில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.ஏ. மன்சூர், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம், எம்.ரி. ஹசன் அலி, பி.எச். பியசேன, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர், கல்லூரியின் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Leave a comment