‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியிலும் ஒரு எதிர்க்கட்சியாக இருப்பதன் அடையாளமே காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸின் கிளை அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவமாகும்’ என்று நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
காத்தான்குடி, ஹிஸ்புல்லா மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ‘முஸ்லிம் காங்கிரஸும் அதன் புதிய இலக்கும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
‘எதிர்க்கட்சி நடத்தவிருந்த மண்டபத்தையும் தீ வைத்து எரிக்கின்றார்கள், ஆளும் கட்சியில் இருக்கின்ற ஒரு கட்சியின் காரியாலயத்தையும் தீ வைத்து எரிக்கின்றார்கள் என்றால் இதன் அர்த்தம் வேறெதுவுமில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் முக்கியமானவை என்பதன் வெளிப்பாடுதான் இச்சம்பவங்களாகும்.’
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநாடு நடைபெறவிருந்த மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்திற்கும் தீ வைக்கப்பட்ட செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோன்று காத்தான்குடியில் எமது கட்சியின் கிளை அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்ட சிறிய சம்பவமும் பரபரப்பாக
பேசப்படுகின்றது.
நாங்கள் ஆளும் கட்சியிலும் இன்னும் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கின்றோம் என்பதைத்தான் இந்த தீ வைப்புச்சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.
இந்த விடயத்தை ஒரு தனிநபர் செய்திருக்கலாம். இன்னுமொரு விடயத்தை தனி நபரோ இயக்கங்களோ செய்திருக்கலாம்.
இதற்காக நாங்கள் பொலிஸாரை விசாரணை செய்யுங்கள் என்று சிரமபடுத்த வேண்டிய அவசியம் தேவையில்லை. எந்த புலன் விசாரணையும் தேவையில்லை.
இந்த தீ வைப்புச் சம்பவம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலட்டிக்கொள்ளவே இல்லை.
நிறைய சேதங்களை சந்தித்தவர்கள் நாங்கள். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் இறுதி நேரத்திலே கட்சியின் உள்ளே இருந்தவர்கள் காலை வாரவில்லையென்றிருந்தால் அதன் முதலாவது முயற்சியிலேயே முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி கண்டிருக்கும். நான் ஆட்களைப்பற்றி சொல்லத் தேவையில்லையென நினைக்கின்றேன்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் அதன் செயலாளர் தவிசாளர் ஆகியோர் தன்னுடைய நாடாளுன்ற ஆசனங்களை இழந்து விட்டு அதில் களமிறங்குவதற்கான எந்த தேவையும் ஏற்பட்டிருக்காது. இறுதி நேரத்தில் நாங்கள் காலைவாரப்பட்டோம்.
எதிரிகளை வெற்றியடைவதற்கு முன்னர் எமது அணியை சரி செய்து கொள்ள வேண்டும். இலக்குகளை பற்றிய தெளிவு எமது அணியிலுள்ள அனைவருக்கம் தெரிய வேண்டும்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதன்தென்பது என்னைப்பொறுத்தவரை நல்லதொரு வழி.
தனித்துப்போட்டியிடவது பிழையான வழியல்ல. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதென்பது மடத்தனமான வழி என சிலர் கூறுவார்கள்’ என்றார்.
தனித்து போட்டியிடுவதன் மூலம் முஸ்லிம்களின் பலத்தை நிரூபிக்க முடியுமெனும் தைரியம் எங்களுக்கு இருந்தால் நிச்சயமாக தனித்து போட்டியிடலாம் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
-Tamilmirror
Leave a comment