மன்னிப்பு கேட்குமாறு கோரிய செல்வம் எம்.பி.யும் – எதற்கு மன்னிப்பு எனக் கேட்ட அமைச்சர் ரிசாத்தும்

மன்னார் ஆயர் தொடர்பான கருத்து மோதல் விவகாரம்:

-எம். சுஐப்

மரியாதைக்குரிய மன்னார் ஆயர் குறித்து என்னால் சொல்லப்பட்ட உண்மையான ஆதாரபூர்வமான தகவல்களுக்காக மன்னிப்பு கோருமாறு தமிழ் கூட்டமைப்பினர் அறிக்கைவிட்டு வருகின்றனர். நான் ஏன் மன்னிப்புக் கோர வேண்டும். மதிப்புக்குரிய ஆயர் அவர்களின் மத விவகாரங்களிலோ அல்லது தனிப்பட்ட விடயங்கள் குறித்தோ நான் எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. மாற்றமாக முஸ்லிம் சமூகத்தின் உரிமை சார்ந்த விடயங்களில் அவர் தலையிட முற்பட்ட போதுதான் நான் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினேன். பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து நியாயமானது. தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டில் இருந்தால் வத்திக்கானுக்கும், ஜெனீவாவுக்கும் சென்று உண்மையை சொல்ல தயங்க வேண்டியதில்லை. மன்னார் நானாட்டான் காணி விடயமாக நடவடிக்கையெடுத்த போது, அதற்கு எதிராக ஆயர் செயற்பட்டதை அதிகாரிகள் மற்றும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதே போன்று மன்னார் காணிப் பிரச்சினையும் தற்போது உருவெடுத்துள்ளது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை குறித்து ஆராய மூவரடங்கிய சட்டத்தரணி குழுவொன்றை தமது கட்சி நியமித்துள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதேபோல் வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் எவ்வித இனப் பாகுபாடுமின்றி முன்னெடுக்கப்படுவதை நான் உறுதி செய்கின்றேன்.

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக யாரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அதே இடத்தில்தான் பள்ளிவாசல் இன்றும் இருக்கின்றது. எதிர்காலத்திலும் அதே இடத்தில் தான் இருக்கும் என்ற உறுதிப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இது குறித்து அமைச்சர் கூறுகையில்; கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருக்க வேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதற்காக ஏனையவர்களை பகைக்க வேண்டிய தேவையில்லை. தேசிய காங்கிரஸ¤டன் நாம் பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். கடந்த தேர்தலில் எமது கட்சி எடுத்த முயற்சியால் தான் கிழக்கில் ஆட்சியை பெற்றுக்கொள்ள முடிந்தது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

மன்னார் ஆயரை தம்புள்ள பெளத்த மதகுருவுடன் ஒப்பிட்டு தரக்குறைவாகப் பேசிய அமைச்சர் றிசாத் பதியுதீன் பகிரங்கமாகப் பொது மன்னிப்புக்கோர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் செவ்வாயன்று பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பிக்கு ஒருவருடன் மன்னார் ஆயரைத் தொடர்புபடுத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.

மன்னார் ஆயர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தவர். மக்களின் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியவர். நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் பிரச்சினைகளை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டியவர்.

எனவே, மன்னார் ஆயரை தம்புள்ளை பிக்குடன் ஒப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசியதால், இந்த அவையில் அமைச்சர் றிசாத் பொதுமன்னிப்பு கோர வேண்டும் என்று செல்வம் எம்.பி. கேட்டிருந்தார்.

இதேவேளை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் போது மன்னார் ஆயர் குரல் கொடுத்ததாக நாம் கேள்விப்படவில்லை. அவ்வாறு கூறுபவர்கள் ஆதாரங்களை வெளியிடட்டும் எனத் தெரிவித்தார்.

மன்னார் ஆயர் முஸ்லிம்களின் மீள்குடியேற்றச் செயற்பாடுகளுக்கு முரணாகச் செயற்படுவது ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Published by

Leave a comment