இருக்கும் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவதே அரசின் திட்டம் – பொலன்னறுவையில் ஜனாதிபதி
புதிய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படமாட்டாது. தற்போது இயங்கும் பல்கலைக்கழகங் களின் வசதிகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களின் வசதிகளை அதிகரித்து அவற்றை மேம்படுத்துவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சருக்கு வழிகாட்டல்களை வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைத் துரிதமாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பில் கல்வியமைச்சு உரிய செயற்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமெனவும் தெரிவித்தார்.
இதற்கு முன்னுரிமை வழங்குமாறு கல்வியமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரையும் விடுத்தார். பொலனறுவை மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள், மாகாண மற்றும் மாவட்ட மட்ட அதிகாரிகள் பெருமளவில் கலந்து கொண்ட இந்த நிகழ்விலேயே ஜனாதிபதி இதற்கான பணிப்புரையை விடுத்தார்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி வேலைத்திட்டத்தின் சமகாலத்தில் இச்செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்த ப்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, அடுத்த தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் போது இது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருப்பது அவசியமெனவும் கூறினார்.
நாடளாவிய ரீதியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆயிரத்துக்கு மேற் பட்ட வெற்றிடம் உள்ள போதும் 281 ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களே தற்போதுள்ளனர் என்பதை கல்வியமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ:
பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்களைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இது தொடர்பில் பல்கலைக் கழகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேவையான பாடங்களுக்குரிய பட்டதாரிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வியமைச்சைக் கேட்டுக் கொண்டார்.
Leave a comment