ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் வேலைகள் எட்ட முடியாத எல்லைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கையில் மூக்கணாங்கயிறு போடப்பட்டு பின்னுக்கு இழுக்கப்படும் காலமிது. ஐரோப்பிய நாடுகளின் எச்சரிக்கைகள், ஐ.நாவின் காலக்கேடுகள், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களையும் தாண்டி தனது போக்கில் சென்று கொண்டிருந்த ஈரானின் பயணம் சென்ற வாரம் ஈராக் தலைநகர் பக்தாத் பேச்சுக்களூடாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜேர்மன் ஆகிய நாடுகளின் முக்கியஸ்தர்கள் சர்வதேச அணுமுகவர் நிலையத்தின் தலைவர், ஐரோப்பிய நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர் உள்ளிட்ட மிக முக்கியமான இராஜதந்திரிகள் பக்தாத் மாநாட்டில் கலந்துகொண்டனர். ஈராக் பிரதமர் நூரி அல்மாலிகியும், ஈரானின் அணுவிவகார அமைச்சர் உள்பட முக்கிய விஞ்ஞானிகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு தங்கள் நிலைபாட்டையும், நியாயங்களையும் முன்வைத்தனர்.
அமைதியான நோக்கிலும், மின்சாரத் தேவைக்குமே யுரேனியத்தை செறிவூட்டுவதாக ஈரான் தெரிவிக்கின்றது. பாதுகாப்பு நோக்கங்களுக்காக இவற்றைச் செய்யாமலிருக்க முடியாது. ஈரானின் எல்லா செயற்பாடுகளும் தாய்மண்ணின் பாதுகாப்பை யொட்டியுள்ள விடயங்கள் என்று அந்நாட்டின் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சுப்பர் பெற்றோலை இருபது வீதமளவில் செறிவூட்டினால் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.
சுப்பர் பெற்றோலை எண்பது வீதத்துக்குமேல் செறிவூட்டி யுரேனியத்தையும் கலந்து இன்னும் பல இரசாயன கலவைகளையிட்டால் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முடியும். இப்போது ஈரான் இதையே செய்து வருவதாக மேற்குலகமும், அமெரிக்காவும் நீண்டகாலமாக சந்தேகிக்கின்றது. ஈரானையும் பார்க்க பன் மடங்கு சக்திவாய்ந்த அணு ஆயுதங்களையும், தொழில் நுட்பங்களையும் கொண்டுள்ள நாடுகள்தான் அமெரிக்காவும் ஐரோப்பாவும். இவ்வாறுள்ள நிலையில் எங்கேயோ உள்ள ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை ஏன் அலட்டிக் கொள்கின்றன.
மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய நாடுகளில் ஈரான் மாத்திரமே அமெரிக்காவின் பிரதான எதிரி. சிரியா, லெபனான், பஹ்ரைன் போன்ற நாடுகளிலுள்ள ஷியா முஸ்லிம்களையும் ஈரானே வழி நடாத்துகின்றது. இது இவ்வாறுள்ள நிலையில் அருகாமையிலுள்ள ஈராக்கிலும் ஷியா முஸ்லிம்களே பெரும்பான்மை. இஸ்ரேலை மத்திய கிழக்கிலிருந்து துடைத்து எறிய வேண்டுமென்ற வெறியோடு ஈரானுடன் எல்லா ஷியா முஸ்லிம்களும் செயற்படும் நேரமிது. இக்காலகட்டத்தில் ஈரான் அணு ஆயுதங்களையும் தயாரித்துக்கொண்டிருந்தால் இஸ்ரேலின் நிலை என்ன. இந்த எண்ணமும் ஏக்கமும்தான் அமெரிக்காவையும் அதன் மேற்குலக கூட்டாளிகளையும் படாதபாடுபடுத்துகின்றது.
இன்னும் இஸ்ரேலும் இது தொடர்பாக மேற்குலகையும், அமெரிக்காவையும் தொந்தரவு செய்து வருகின்றது மத்திய கிழக்கின் கட்டுப்பாடு ஈரானிடம் வந்துவிட்டால் சகல நாடுகளதும் வளங்கள் தெஹ்ரானின் காலடியில் வீழ்ந்துவிடும் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க, பிரிட்டன் இராணுவ தளங்கள், முகாம்களின் இருப்பு, பாதுகாப்பு, வியாபாரங்கள் அடியோடுபடுத்துவிடும். இஸ்ரேல் இரவோடு இரவாக ஈரானால் விரட்டியடிக்கப்படும் இந்த அபாயங்கள் ஏற்படாமல் தடுக்கும் முன்னேற்பாடாகவே இராணுவ விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியாக ஈரானை வளர விடாமல் தடுக்கும் முயற்சிகள். எத்தனையோ வகையான தடைகள் கொண்டுவரப்பட்டன. உள்நாட்டில் கலகத்தையுண்டாக்கி ஈரான் அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு அமெரிக்க இஸ்ரேல் நலன்சார்பு அரசை நிறுவும் மேற்குலக முயற்சிகளும் தோற்றுப் போய்விட்டன.
செறிவூட்டப்பட்ட எண்ணெய், எரிபொருட்கள் பார்வையிடப்படல் வேண்டும். ரஷ்யா அல்லது பிரான்ஸ¤க்கு இவை அனுப்பப்பட்டு பரிசீலிக்கப்படல் வேண்டும். இருபது வீதத்துக்கு மேல் பெற்றோலை செறிவூட்டக் கூடாது. ஈரானின் அத்தனை அணு உலை நிலையங்களையும் ஐ.நா. பரிசோதகர்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் இவ்வாறான எத்தனையோ நிபந்தனைகள் ஈரான்மீது திணிக்கப்பட்டன. இவை எவற்றிலும் திருப்தியடையாத மேற்குலகும், அமெரிக்காவும் ஈராக்கூடாக காய்களை நகர்த்தி என்னதான் செய்வதென்ற முடிவுக்கு வருவோம் என பக்தாத் மாநாட்டைக் கூட்டியது. ஐரோப்பிய நாடுகள் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதோ அல்லது ஈரானுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளோ இப்போதைக்கு உசிதமானதல்ல என்பதையுணர்ந்தே ஈரான் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கிறது. நீண்டகால பிடிவாதம், குதர்க்கம் ஆபத்தையுண்டாக்குமென்று ஈரானுக்கிருந்த உள் அச்சம் என்பன ஈரானையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துச் சென்று விட்டதுபோல.
தேர்தல் காலம் நெருங்கி வருவதால் எல்லோராலும் பேசப்படும் விடயமொன்றைச் செய்வோம் என்ற வேகத்தில் பராக் ஒபாமா இறங்கிவிட்டார். இதேபோன்றுதான் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷ¤ம் ஈரானுக்கெதிரான நிலைப்பாட்டை எடுத்து இரண்டு முறையும் தேர்தலை வென்றுவிட்டார். சந்தேகத்துக்கிடமான விடயங்களை இல்லாமல் செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை ஈரான் மேற்கொள்ளாவிட்டால் தடைகள் நிவாரண உதவிகள் என்பன கேள்விக்கப்பாலான விடயமாகிவிடும் என்று பராக் ஒபாமா எச்சரிக்கும் தொனியில் கூறியிருக்கிறார். ஒபாமாவின் இந்தக் கருத்து ஈரானுக்கு கடைசியாக வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பமே இந்த பேச்சுவார்த்தை என்று எண்ணத் தோன்றுகிறது. கடுமையான நிபந்தனைகளிலிருந்து ஈரான் தவிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கக் கூடாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எஹுட்பராக் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் கேட்டுள்ளார். என்னதான் என்றாலும் ஈரானைத் தலையில் குட்டி வா பேச்சுவார்த்தைக்கு என்று அழைத்தாற் போலுள்ளதென்கின்றனர் ஆய்வாளர்கள். ஈரானை வழிக்கிக்கொண்டு வருவதனூடாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையைக் குறைத்து அமெரிக்கத் தேர்தலில் வெல்வதை வைத்தே பராக் ஒபாமா காய்களை நகர்த்துவதாயுள்ளது நிலைமைகள். ஆசிய நாடுகளின் வழமையான வாடிக்கையாளர்களுக்கு ஈரான் எண்ணெய் விநியோகம் செய்வதை பக்தாத் மாநாடு தடுக்க வில்லை. இருந்த போதும் என்ன வகையான நிபந்தனைகளுடன் ஈரானின் செறிவூட்டபட்ட யுரேனியத்தை வெளிநாடுகள் பரிசோதிக்கும் என்ற விவரங்கள் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்கப்படவுமில்லை. ஈரானின் எல்லைக்குவந்து வெளிநாட்டவர் செறிவூட்டல் நடவடிக்கைகளைப் பார்வையிடலாம் என்று தெஹ்ரான் முன்னர் கூறியதை மேற்கு நாடுகள் நிராகரித்திருந்தமை தெரிந்ததே. ஒட்டுமொத்தமாக ஒன்றுக்கொன்று நலவும், கெடுதியும் கலந்ததான விட்டுக்கொடுப்புகள், நிபந்தனைகள், இணக்கப்பாடுகள் என்பன பக்தாத் பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்டதென்பதே உண்மை.
பேச்சுவார்த்தையின் இறுதி அமர்வுகளின் போது இருபதுவீதமளவில் செறிவூட்டபடுதலை கைவிட்டு சுப்பர் பெற்றோலை 3.5 வீதமளவில் செறிவூட்டுவதென்று உடன்பாடு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஈரானின் மின்சார தேவையைப் பொறுத்தளவில் இருபதுவீதமான செறிவூட்டல் அதன் தேவைகளையும் பார்க்க அதிகமானதென ஐ.நா., அமெரிக்க +திகாரிகள் கூறியிருக்கின்றனர். இருபதுவீதமாக செறிவூட்டல், இதை நிறுத்தாவிட்டால் கொண்டுவரப்படவுள்ள தடைகள் குறித்த பேச்சுக்கள் வழமையாக இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகளிலும் ஆராயப்படும் விடயமென்பதால் இப்போதைய பக்தாத் பேச்சுக்களை இது பாதிக்காதென்கின்றனர் அவதானிகன்.
-Thinakaran
Leave a comment