தெஹிவளை மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொடர்பில் சில பெரும்பான்மை சமூகத்தினர் ஆரம்பித்துள்ள அத்துமீறல் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கொண்டுவந்துள்ளார்.
தற்போது முஸ்லிம்களின் மத வழிபாட்டு தளங்கள் மீதான தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருவதாகவும் இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். அத்துடன் இது குறித்து உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
இவை தொடர்பில் முஸ்லிம்கள் அச்சம் கொள்ள தேவையில்லையென்றும் இது குறித்து உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்ற உறுதியினையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ வழங்கியதாக அமைச்சர் றிசாட் குறிப்பிட்டார்.
தம்புள்ள, குருநாகல்இ தெஹிவளையில் என முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களின் பின்னணயில் குறிப்பிட்ட சில பௌத்த தேரர்கள் உள்ளனர். இவ்விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தி தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.
அத்துடன், தெஹிவளை மேயருடன் தொடர்புகொண்ட குறித்த பள்ளிவாசல் தொடர்பில் அமைச்சர் றிசாட் நீண்ட நேரம் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, தெஹிவளை, கல் விஹாரை வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு கல் எறியப்பட்டதற்கு உலமா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இப்பள்ளிவாசலில் சட்டத்துக்கு முரணாக மாடு அறுக்கப்பட்டால் அதனை நீதிமன்றத்திடம் முறையிடுவதை விடுத்து பௌத்த பிக்குகள் சட்டத்தை கையிலெடுப்பதும் கல்லால் வணக்கஸ்தலத்துக்கு எறிவதும் நாட்டின் அரசாங்கத்தை அவமதிப்பதாகும்.
இதன் மூலம் நாட்டில் பௌத்த பயங்கரவாதம் உருவாகுவதாகவே கருத முடியும். ஒரு வணக்கஸ்தலத்தில் சட்டத்துக்கு மாறாக ஏதும் நடைபெறுமாயின் அத்தகைய செயல்களில் ஈடுபடுவேரே கைது செய்யப்பட வேண்டுமே தவிர வணக்கஸ்தலம் மூடப்பட வேண்டும் என்பதை அறிவுள்ள எந்த மனிதனும் ஏற்கமாட்டான்.
சில பௌத்த விகாரைககளுக்கு வரும் பெண்களை சில பௌத்த பிக்குகள் துஷ்பிரயோகம் செய்து கைது செய்யப்படும் செய்திகளை அடிக்கடி நாம் ஊடகங்களில் காண்கிறோம். அதற்காக சம்பந்தப்பட்ட விகாரையை மூடும் படி எவரும் ஆர்ப்பாட்டம் செய்யவுமில்லை கல் எறியவுமில்லை. மாறாக துஷ்பிரயோகம் செய்த பிக்குகளை கைது செய்யப்பட்டதன் மூலம் நாட்டில் நீதி சரியாக செயற்பட்டது.
இந்த நிலையில் தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தை தொடர்ந்து குருணாகல், தெஹிவலை என இஸ்லாமிய வணக்கஸ்தலங்களுக்கு எதிரான செயற்பாடுகள் நாட்டின் சமாதானத்துக்காக குரல் கொடுக்கும் எம்மை கவலையுற செய்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவு வேண்டி எந்த பௌத்த பிக்குவும் செல்லாத நிலையில் எமது உலமாக்கள் இருவரே விழுந்தடித்துக்கொண்டு சென்றனர்.
ஆனாலும் இன்று அத்தகைய உலமாக்களின் இஸ்லாமிய வணக்கஸ்தலங்கள் தாக்கப்படுகின்றன என்றால் அந்த உலமாக்கள் நாட்டுக்கு ஆதரவு தேடி ஜெனீவா வரை சென்றதை பௌத்த பிக்குகள் விரும்பவில்லையா என்ற கேள்வியே எழுகிறது.
எனவே, தெஹிவலை பள்ளிவாயல் மீதான கல்லெறி தாக்குதலை நாம் வன்மையாக கண்டிப்பதோடு அரசாங்கம் தொடர்ந்தும் சட்டத்தை பொதுமக்கள் கையிலெடுப்பதை பார்த்துக்கொண்டு மௌனமாக இருப்பதை தவிர்க்க வேண்டும்” என்றார்.
-Tamilmirror
Leave a comment