த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை காத்தான்குடிக்கு வருமாறு அழைப்பு
-MMS
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் 26-05-2012 நேற்று பி.ப 5.00 மணிக்கு மட்டக்களப்பில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சந்தித்தது.
இச் சந்திப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சிரேஸ்ட பாரளுமன்ற உறுப்பினர்களான திரு.இரா.சம்பந்தன், திரு.மாவை சேனாதிராஜா, திரு. பொன் செல்வராஸா, திரு. அரியனேந்திரன் ஆகியோரும் சம்மேளன தலைவர்,செயலாளர்,பிரதிச்செயலாளர்கள் உட்பட சம்மேளனத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்,முஸ்லிம் சிவில் சமூகங்களின் ஒற்றுமைய சீர்குலைக்கும் விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு இதற்கு எவ்வாறு அரசியல் தலைமைகளும் காரணமாக அமைகிறார்கள் என்ற விடயம் சுட்டிக்பாட்டப்பட்டது.
அவ்வாறே ஊடகங்கள் எவ்வாறு உண்மைக்கு புகுறம்பான செய்திகளை வெளியிட்டு தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைப்பதில் காரணமாய் அமைகின்றது என்ற விடயம் எடுத்துக்காட்டப்பட்டது. ஓரிரு தினங்களுக்கு முன்பு யாழ்பானத்திலிருந்து ஒரு சிறுவன் கடத்தி வரப்பட்டு மதம்மாற்றப்பட்டு வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டதாய் தமிழ் ஊடகங்களின் வெளியிடப்பட்ட போலியான தகவலின் உண்மை நிலை தெளிவுபடுத்தப்பட்டது.
தேசிய அரசியலில் முஸ்லிம் மக்களை இனைத்துக்கொள்ளாத எந்தவித தீர்வுத்திட்டங்களும் பலனளிக்காது என்ற விடயம் திரு. இரா.சம்பந்தன் அவர்களால் சுட்டிக்பாட்டப்பட்டதோடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எந்தவித தீட்வுத்திட்டங்களும் முஸ்லிம் மக்களை புறக்கணிக்காது என உறுதி வழங்கப்பட்டது.
த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை காத்தான்குடிக்கு வருமாறு அழைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனை காத்தான்குடிக்கு வருகை தருமாறு காத்தான்குடி பள்ளிவாசல்களின் முஸ்லிம் நிறுவன சம்மேளனப் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
காத்தான்குடி பள்ளிவாசல்களின் முஸ்லிம் நிறுவன சம்மேளனத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமெரிக்கமிஷன் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போதே மேற்படி அழைப்பை விடுத்தனர்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட தலைவர் இரா.சம்பந்தன் தற்போதைய இறுக்கமான சூழ்நிலையில் தன்னால் வருகை தர முயாதுள்ளதாகவும் பிறிதொரு தினத்தில் காத்தான்குடிக்கு தான் வருகை தருவதாகவும் சம்மேளனப் பிரதிநிதிகளிடம் இரா.சம்பந்தன் கூறினார்.
கிழக்கில் முஸ்லிம்களுக்கு காணிப் பிரச்சினைகள் உள்ளதாகத் தெரிவித்த சம்மேளனப் பிரதிநிதிகள், பாரம்பரியமாக இருந்துவரும் தமிழ,; முஸ்லிம் ஒற்றுமை தொடர்ந்து பேணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
யாழ்ப்பாண தமிழ்ச் சிறுவன் ஒருவனை காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் கடத்திவந்து கட்டாயப்படுத்தி இஸ்லாம் மார்க்கத்தை தழுவ வைத்ததாக கூறப்படும் செய்தி தொடர்பில் அதன் உண்மை நிலைமையை இரா. சம்பந்தனுக்கு பள்ளிவாசல் சம்மேளனப் பிரதிநிதிகள் விளக்கிக் கூறியதாக சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.சுபைர் தெரிவித்தார்.
இவற்றிற்கு பதிலளித்த இரா.சம்பந்தன்,
தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை என்பது முக்கியமானதாகும். இரண்டு சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வது அவசியமாகும். முஸ்லிம்களுக்கு எதிராக இன்று பேரினவாதம் செய்யும் நடவடிக்கையின் ஒன்றாகவே தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பு விவகாரத்தை நாம் பார்க்க முடியும். மிக விரைவில் தீர்வு நிச்சயம் கிடைக்கும் அதில் முஸ்லிம்களும் சரிசமமாக பார்க்கப்படுவார்கள். மறைந்த தலைவர் அஷ்ரப் என்னுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் எனவும் கூறினார்.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பி.அரியநேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இமாம், காத்தான்குடி பள்ளிவாசல்களின் முஸ்லிம் நிறுவன சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.சுபைர், செயலாளர் அஷ்ஷெய்க் எம்.அன்சார் நழீமி, பிரதி செயலாளர்களான ஏ.எம்.சாதிக், ஏ.எல்.இசட் பஹ்மி, உறுப்பினர் கே.எம்.எம்.கலீல், எம்.சாதுலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a comment