ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து ஸ்கொட்ந்து தனி நாடாக செல்ல வேண்டுமா வேண்டாமா என்று அப்பகுதி மக்களிடம் கேட்டு நடத்தப்படக்கூடிய கருத்தறியும் வாக்கெடுப்பில் தனி நாடாக பிரிவதற்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்கமென்கிற பிரச்சாரத்தை ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சரான அலெக்ஸ் சல்மண்ட் ஆரம்பித்துவைத்துள்ளார்.
ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் தலைவராக இருக்கின்ற முதன்மை அமைச்சர் சல்மண்ட், ஸ்கொட்லாந்தின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்கக்கூடிய நல்ல நிலையில் தற்போது ஸ்கொட்லாந்து மக்கள் இருக்கிறார்கள் எனக் கூறினார்.
இந்த பிரச்சாரத்தின் துவக்க விழாவில் ஸ்கோட்டிஷ் நேஷனல் கட்சியுடன் இணைந்து ஸ்கொட்டிஷ் கிரீன்ஸ் உள்ளிட்ட சிறிய கட்சியினர் கலந்துகொண்டுள்ளனர்.
இங்கிலாந்தையும் ஸ்கொட்லாந்தையும் முந்நூறு வருட காலமாக ஒரே நாடாக வைத்திருக்கும் ஆக்ட் ஆப் யூனியன் என்ற சாசனத்தை ரத்து செய்ய வேண்டும் என இவர்கள் கோருகின்றனர்.
2014ஆம் ஆண்டு இந்த மக்கள் கருத்தறியும்ன் வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கொட்லாந்து ஐக்கிய ராஜ்ஜியத்துக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று விரும்பும் பிரிவினர் தமது பிரச்சாரத்தை அடுத்த மாதம் ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கொட்லாந்து தனிநாடு கோரிக்கையின் பின்னணி
1707ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டிருந்தது. ஸ்கொட்லாந்து அச்சமயத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்தது. இங்கிலாந்திடம் இருந்து நிதி உதவிகள் பெறுவதற்காக ஸ்கொட்லாந்து தனி நாடு என்கிற நிலையை விட்டுக்கொடுத்து இங்கிலாந்துடன் இணைய வேண்டி வந்ததென்கிற ஒரு பார்வை உண்டு.
ஸ்கொட்லாந்தின் பிரபல கவிஞரான ராபர்ட் பர்ன்ஸ்கூட இங்கிலாந்திடம் இருந்து தங்கத்தை வாங்குவதற்காக விற்கப்பட்டவர்கள் நாங்கள் என்று ஒரு இடத்தில் பாடியிருக்கின்றார்.
அந்தக் காலத்திலேயே ஸ்கொட்லாந்து இணைக்கப்பட்டதை அப்பகுதியில் பலர் எதிர்த்து வந்துள்ளனர்.
ஸ்கொட்லாந்து தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கை மேலெழுவதும் பின்னர் அமுங்கிப்போவதும் என்பதும் கடந்த முந்நூறு ஆண்டுகளில் பல தடவைகளில் நடந்துள்ளது.
ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி
1934ல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி, தனி நாடு கோரிக்கையை முன்னிறுத்தி அரசியல் செய்தது.
அக்கட்சி முதல் தடவையாக ஸ்கொட்லாந்தில் ஆட்சிக்கு வந்தது 2007ல் பிற்பாடு 2011லும் வெற்றி பெற்று தற்போது ஆட்சியில் இருப்பதும் அக்கட்சிதான்.
ஸ்கொட்லாந்து தனி நாடாகப் பிரிந்து செல்வது பற்றி மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற ஒரு தேர்தல் வாக்குறுதியை ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி அளித்திருந்தது.
அதன்படி 2014ஆம் ஆண்டில் ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த தற்போது ஆட்சியிலுள்ள அக்கட்சி விரும்புகிறது.
அவ்வாக்கெடுப்பில் தனி நாடாக பிரிந்து செல்வதற்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்கிற ஒரு பிரச்சாரம்தான் இப்போது துவங்கப்பட்டுள்ளது.
அதிகாரப் பகிர்வு
ஐக்கிய ராஜ்ஜியத்துக்குள்தான் ஸ்கொட்லாந்து இருந்தாலும் 1999ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்துக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதிலிருந்து, அது நிறைய சுயாட்சி அதிகாரங்களைக் பெற்றுள்ளதுது.
தற்போது ஸ்கொட்லாந்துக்கென தனி நாடாளுமன்றம் உள்ளது. சில பொதுவான விஷயங்கள் தவிர மற்ற தங்களுக்கான சட்டங்களை அவர்களே இயற்றிக்கொள்கின்றனர்.
தனி நாடாக மாற வேண்டும் என்பது ஸ்கொட்லாந்துடைய தற்போதைய ஆட்சியாளர்களின் எண்ணமாக இருக்கிறது என்றாலும் அப்பகுதி மக்கள் அதனை அந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்று நிச்சயமாகக் கூறுவதற்கில்லை.
தனி நாடு கோரிக்கையைவிட ஐக்கிய ராஜிஜியத்துக்குள் இருப்பதையே ஸ்கொட்லாந்து மக்களில் பெரும்பான்மையானோர் ஆதரிப்பதாக சென்ற ஆண்டும் அதற்கு முன்பும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் காட்டின.
அதனால்தான் கருத்தறியும் வாக்கெடுப்பை உடனடியாக நடத்தாமல் இரண்டு வருடங்கள் கழித்து நடத்த ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி நினைக்கிறது.
தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கும் ஒரு பிரகடனத்தில் ஸ்கொட்லாந்து மக்கள் பத்து லட்சம் பேர் கையொப்பமிட வேண்டும் என பிரச்சார துவக்க நிகழ்ச்சியில் அக்கட்சி கோரியுள்ளது.
-BBC-TAMIL
Leave a comment