சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் பங்குபற்றுவதற்கான அழைப்பு

கருத்தமைவு பிரிவில் வெற்றிபெறுபவருக்கு 3000 – 5000 சுவிஸ் ஃபிராங்கள்

திட்டங்கள் பிரிவில் வெற்றியீட்டுபவருக்கு 5000 – 10000 சுவிஸ் ஃபிராங்கள்

ஐக்கிய நாடுகளுக்கான தகவல் தொழில்நுட்ப முகவர் அமைப்பான சர்வதேச தொலைத்தொடர்பாடல் ஒன்றியத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கையின் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து விண்ணப்பங்களை இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணையம் கோரியுள்ளது.

திறந்த சுற்று போட்டியாக இடம்பெறும் இந்த போட்டியில் பங்குபற்றுவதற்கு தகவல் தொழில்நுட்ப துறையில் புத்தாக்க கண்டுபிடிப்பை மேற்கொண்டிருத்தல் வேண்டும். தெரிவு செய்யப்படும் 12 போட்டியாளர்கள் சர்வதேச தொலைத்தொடர்பாடல் ஒன்றியத்தின் ரெலிகொம் வேர்ல்ட் 2012 இல் பங்குபற்றுவதற்கான பயண, தங்குமிட மற்றும் இதர செலவீன வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

போட்டி இரு பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருத்தமைவு மற்றும் திட்டங்கள் எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கருத்தமைவு பிரிவில், முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட சிந்தனைகள் உள்வாங்கப்படும். திட்டங்கள் பிரிவில் தற்போது அமுல்படுத்தப்பட்டு பெறுபேறுகளை வெளிக்காட்டியுள்ள கண்டுபிடிப்புகளும், அவற்றை அபிவிருத்தி செய்ய அவசியமான உதவிகளை எதிர்பார்த்திடும் திட்டங்களும் உள்வாங்கப்படவுள்ளன.

இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணையத்தின் ஆணையாளர் தீபால் சூரியாராச்சி கருத்து தெரிவிக்கையில், ´எமது நோக்கம், இலங்கையில் கண்டுபிடிப்புகளையும், புத்திகூர்மையையும் வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளது. இந்நடவடிக்கைக்காக சர்வதேச தொலைத்தொடர்பாடல் ஒன்றியத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டித்தொடர் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த போட்டியில் இலங்கையர்கள் தமது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டுவார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம். அனைத்து மாணவர்களுக்கும், தொழில்நுட்ப வரைஞர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இந்த போட்டி குறித்து அறிவிப்பதுடன், இந்த போட்டியில் பங்குபற்றுவதற்காக ஊக்குவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்´ என்றார்.

அனைத்து விண்ணப்பங்களும், சமர்ப்பிப்புகளும், பின்வரும் தலைப்புகளினுள் உள்ளடங்குவதாக அமைந்திருத்தல் வேண்டும். பொருளாதார அபிவிருத்தி, கல்வி, மனித உரிமைகள், சுகாதார பாதுகாப்பு, சமூக பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் இணைய பாதுகாப்பு போன்றன அத்தலைப்புகளாக அமைந்துள்ளன.

கருத்தமைவு பிரிவில் வெற்றிபெறுபவருக்கு 3000 – 5000 சுவிஸ் ஃபிராங்கள் அன்பளிப்புத் தொகையாக வழங்கப்படவுள்ளது. திட்டங்கள் பிரிவில் வெற்றியீட்டுபவருக்கு 5000 – 10000 சுவிஸ் ஃபிராங்கள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன. மேலும், ஒரு வருட காலப்பகுதிகான ஆலோசனை திட்டமும் வழங்கப்படவுள்ளது.

அனைத்து விண்ணப்பப்படிவங்களும் இணையத்தினூடாக ஜுலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக கிடைக்கக்கூடிய வகையில் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

Published by

Leave a comment