ஏ.எம். ஜெமீல்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்ட மளிப்பு விழாவில் அதன் ஸ்தாபக உபவேந்தரான பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்கள் இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கெளரவிக்கப் பட்டதையிட்டு அப்பல்கலைக் கழகத்தின் ஸ்தாபக முன்னோடிகளுள் ஒருவன் என்ற ரீதியில் நான் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடை கின்றேன்.
அன்று ஒலுவிலில் பற்றைக்காடு நிறைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த அரிசி ஆலை கட்டடமொன்றில் மறைந்த தலைவர் – அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தை ஸ்தாபித்த போது அதனை மிகத் துணிச்சலுடன் பொறுப்பேற்று அதன் உபவேந்தராக பதவியேற்ற பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் இரவு, பகலாக வியர்வை சிந்தி முழுமூச்சாக உழைத்ததன் பிரதி பலனாகவே இன்று மூவின மாணவர்களும் உயர் கல்வி கற்கின்ற சகல வசதிகளும் கொண்ட ஒரு தேசிய பல்கலைக் கழகமாக அது தலை நிமிர்ந்து நிற்கிறது.
விடாப்பிடியான போராட்டத்தின் பிரதிபலிப்பு!
உண்மையில் அன்று யுத்த சூழ்நிலை காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்க ளின் கல்வி கேள்விக்குறியாக மாறிய போது எமது முஸ்லிம் பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றின் அவசியத் தேவையை உணர்ந்து கொண்ட நான் எனது தலைமையில் இயங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் மாணவர் சம்மேள னத்தையும் கிழக்குப் பல்கலைக் கழக முஸ்லிம் மாணவர்களையும் அணிதிரட்டி தொடர்ச்சியாக போரா டினேன்.
இது விடயத்தில் நான் விடாப்பிடி யாக நின்றதன் பயனாகவே மறைந்த தலைவர் அஷ்ரப் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தை ஸ்தா பிப்பதற்கு சந்திரிகா அரசில் தனக்கிருந்த முழு அரசியல் பலத்தையும் பயன் படுத்தி மிகவும் விவேகத்துடன் தீவி ரமாக செயற்பட்டு அதில் வெற்றியும் கண்டார்.
இப்படி தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உருவாக்கத்தில் தலைவர் அஷ்ரப்புடன் இணைந்து முக்கிய பங்காற்றியதாலும் அதனைத் தொடர்ந்து இப்பல்கலையின் வளங்கள் மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தியில் பல்கலை நிர்வாகத்தினர் மற்றும் உபவேந்தர் பேராசிரியர் காதருடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவன் என்ற ரீதியிலும் குறிப்பாக நான் ஒரு மாணவனாக இருந்தும் கூட அந்த உபவேந்தரின் செயலாளர் போன்று அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்றவன் என்ற ரீதியிலும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பரிணாம வளர்ச்சி பற்றியும் அதில் பேராசிரியர் காதரின் காத்திரமான செயற்பாடுகள் குறித்தும் நான் மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளேன்.
இப்பல்கலைக் கழகத்தின் ஆணிவே ராக இருந்து அதன் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு செய்த காதரின் தூரதிருஷ்டியான சிந்தனைகள் மற்றும் வழிகாட்டல் காரணமாக நானும் புடம்போடப்பட்டு – பல்கலைக் கழக அபிவிருத்தியில் என்னை முழு நேர ஊழியனாக ஈடுபடுத்திக் கொண்டேன்.
இத் தனைக்கும் ஒரு பல்கலைக் கழக மாணவனாக இருந்து கொண்டே நான் பல்கலை அபிவிருத்தியில் முக்கிய பாத்திரத்தை வகித்து வந்தேன். தென்கிழக்கு பல்கலையின் தோற்றத்திற்கு காரணகர்த்தாவாகவும் இப்பல் கலையின் ஸ்தாபக மாணவர் பேரவை தலைவராகவும் அமைச்சர் அஷ்ரப்பின் பிரதிநிதியாகவும் நான் செயற்பட்டதால் எனக்கு இது விடயத்தில் பாரிய பொறுப்பு இருந்து வந்தது.
அஷ்ரபின் இலட்சியக் கனவு நிறைவேற்றம்!
அது தவிர மறைந்த தலைவர் அஷ்ரப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அப்போதைய தலைவரான பேராசிரியர் எஸ். திலகட்னவிடம் தென்கிழக்குப் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பான அவரது இணைப்பாளராக என்னை அறிமுகப்படுத்தி எனது பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கு மாறு உத்தரவிட்டிருந்தார். அதனால் பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் உபவேந்தர் பேராசிரியர் காதருடன் கூட்டிணைந்து செயற்பட்டதன் மூலம் அவர்களது அறிவு, ஆற்றல், ஆளுமை மற்றும் அனுபவங்களை நேரடியாக கண்டு வியந்துள்ளேன்.
பேராசிரியர் எம்.எல்.ஏ. காதரைப் பொறுத்தளவில் அவர் மாணவர்களுக்கு மாணவராகவும் விரிவுரையாளர்களுக்கு விரிவுரையா ளராகவும் ஊழியர்களுக்கு ஊழியராகவும் நிர்வாகத்தினருக்கு சிறந்த நிர்வாகியாகவும் நட்புடன் பழகி அனைவரது ஒத்துழைப்பையும் பெற்று இப்பல்கலைக் கழகத்தை தனது கடின உழைப்பினால் குறுகிய காலத் திற்குள் கட்டியெழுப்பி எதிர்கால சந்த தியினருக்கு ஒரு தேசிய பல்கலைக் கழகத்தை உருவாக்கித் தந்து விட்டே ஓய்வு பெற்று சென்றார். இதன் மூலம் எமது நோக்கமும் தலைவர் அஷ்ரப்பின் இலட்சியக் கனவும் முழுமையாக நிறைவேறியுள் ளது என்கின்ற ஆத்ம திருப்தி கிடைத்துள்ளது.
பேராசிரியர் காதரின் வலிமையும் மதிநுட்பமும்!
அன்று அவரது தூரநோக்கு சிந்தனையால் பெற்றுக்கொள்ளப்பட்ட பேராசிரியர் ஆளணியே இன்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து வருகிறது என்றால் அது அவரது செயற்பாட்டின் வலிமையையே எமக்கு எடுத்துக்காட்டுகிறது.
அதே போன்று தற்போதைய உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அன்று ரஷ்யா வில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து விட்டு இப்பல்கலைக் கழகத்திற்கு வந்தபோது பல எதிர்ப்புகளுக்கு மத் தியில் அவரை சிரேஷ்ட விரிவுரையா ளராக நியமித்தது மட்டுமல்லாமல் பின்னர் அவரது திறமைகளை இனம்கண்டு வர்த்தக முகாமைத்துவ பீடத்திற்கு பீடாதிபதியாகவும் நியமித்தார்.
அன்று சவால்களை முறியடித்து அந்த நியமனத்தை உபவேந்தர் காதர் வழங்கி இருக்காவிட்டால் இன்று கலாநிதி இஸ்மாயில் உபவேந்தர் பதவியை வகிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கமாட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஒருவரின் தகுதி, திறமை மற்றும் ஆற்றல்களுக்கு மதிப்பளித்து அவருக்கு உரிய இடத்தை வழங்கி அவரை பல்கலைக்கழகத்திற்கும் சமூகத்திற்கும் பயன்மிக்க பிரஜையாக உருவாக்கி விடுவதில் பேராசிரியர் காதர் மிகவும் கச்சிதமாக செயற் பட்டார்.
தலைவர்கள் இனம்கண்ட தீர்க்கதரிசி!
இவரது இத்தகைய திறமைகளையும் சமூகப் பற்றையும் ராஜதந்திர – தூரநோக்கு சிந்தனைகளையும் நன்கு இனம்கண்டு கொண்ட தலைவர் அஷ்ரப் தான் மரணிப்பதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னர் பேராசிரியர் காதரை தமது கட்சியில் இணைத்து அரசியல் செயற்பாட்டில் பங்கேற்குமாறும் தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை ஏற்குமாறும் அழைப்பு விடுத்திருந்த வரலாற்று நிகழ்வை நான் இச்சந்தர்ப்பத்தில் மீட்டு பார்க்கிறேன்.
அதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் போது இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளில் தற்போதைய தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரில் அவருடன் இணைந்து புத்திஜீவிகள் மட்டத்தில் பேராசிரியர் காதரும் அப்பேச்சுவார்த்தை களில் பங்கேற்று சமூகத்திற்காக உரிய பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பதும் முக்கிய வரலாற்றுப் பதிவாகும்.
முஸ்லிம்களுக்கு தனிக் கட்சி அவசியம் என்று வலியுறுத்திய புத்திஜீவி!
பேராசிரியர் காதர் 1980 களில் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளராக கடமையாற்றிய போதே முஸ்லிம்களுக்கு ஓர் அரசியல் கட்சி அவசியம் என்ற கருத்தை துணிகரமாக வலியுறுத்தினார். இப்படி ஒரு கருத்தை முதன் முதலாக முன் வைத்த ஒரு புத்திஜீவி என்ற பெரு மையை இந்த கல்விமானே பெற்றுள் ளார் என்பதை இங்கு சுட்டிக்காட்டு வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவை தவிர அவர் ஓய்வு பெற்ற பின்னரும் கூட இறைவனால் தனக்களிக்கப்பட்ட கல்வி, அனுபவம் என்பவற்றை சமூகத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்கின்ற அவாவுடன் கடந்த பல வருடங்களாக கல்வி மற்றும் சமூக விடயங்களில் கூடிய அக்கறையுடன் அதிகபட்ச செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதைக் கண்டு நாம் புளங்காங்கிதம் அடைகின்றோம்.
பேராசிரியரின் சேவைகளுள் ஓர் அங்கமாக வறிய மாணவர்களின் உயர் கல்விக்கு உதவ வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ‘தலைவர் அஷ்ரப் கல்வி நிறுவகம்’ என்ற நிறுவனத்தை உருவாக்கி அதை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார். அதன் மூலம் இன்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஓய்வு பெற்றும் ஓயாமல் உழைக்கும் பேரறிஞர்!
பதவி நிலையில் இருந்து ஓய்வு பெற்று பல வருடங்களாகியும் இளைய தலைமுறையினரின் உயர் கல்வி வளர்ச்சிக்காகவும் சமூகத்திற் காகவும் பேரறிஞர் காதர் தொடர்ந்தும் ஓயாமல் உழைத்து வருகின்றார் என்பதற்கான சில உதாரணங்களே இவை.
அது மாத்திரமல்லாமல் எமது சமூகத்தில் தனியார் பல்கலைக் கழகமும் உருவாக்கப்பட வேண்டும் என்ற அவரது தூரநோக்கு சிந்தினையின் வெளிப்பாடாக அவரது வேண்டுதலும் தூண்டுதலும் உத்வேகமும் எமக்கு இருந்ததன் காரணமாகவே கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நான் கொம்டெக் உயர் கல்வி நிறுவனத்தை ஸ்தாபித்தேன்.
இன்று அது அவரது முழுமையான வழிகாட்டலுடன் எமது பிரதேசத்தில் ஒரு தனியார் பல்கலைக்கு ஈடாக சிறப்பாக இயங்கி வருகின்றது என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதேவேளை இலங்கையின் முதலாவது முஸ்லிம் அரசியல் துறை பேராசிரியரான இவர் மாத்திரமே முஸ்லிம் சமூகத்தில் இன்றும் அரசியல் துறைப் பேராசிரியராகத் திகழ்கின்றார் என்றால் அவரது பெறுமானத்தை எடுத்தியம்புவதற்கு வேறு உதாரணங்கள் தேவைப்படாது எனலாம். முஸ்லிம் சமூகத்தின் முதுபெரும் கல்விமானாகவும் புத்திஜீவியாகவும் நல்லாசானாகவும் மதிநுட்பத்துடன் கூடிய ஒரு தலைமைத்துவமாகவும் திகழ்கின்ற பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் எம்முடன் சங்கமித்திருப்பதானது எமக்கு தைரியத்தையும் சக்தியையும் தருகின்றது.
உபவேந்தர் மற்றும் மூதவையினருக்கு நன்றி!
இத்தகைய திறமை, ஆற்றல், ஆளுமை, அனுபவம், தூரநோக்கு சிந்தனை மற்றும் சமூகப்பற்று என அனைத்து சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இலங்கை யின் முதலாவதும் ஒரே ஒருவருமான முஸ்லிம் அரசியல்துறை பேராசிரியரான எமது ஸ்தாக உபவேந்தர் எம்.எல்.ஏ. காதருக்கு இப்பல்கலைக்கழகம் காலம் கடந்தாவது கலாநிதி பட்டம் வழங்கி கெளரவிப்பதானது மிகவும் வரவேற்கப்பட வேண்டியதொரு விடயமாகும். அதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தினரை நான் பெரிதும் பாராட்டுகின்றேன்.
இப்பல்கலைக்கழகம் அதன் ஸ்தாபகரான மறைந்த தலைவர் அஷ்ரப்பிற்கு அவரது மறைவின் பின்னர் கலாநிதி பட்டம் வழங்கி கெளரவித்தது.
-thinakaran
Leave a comment