தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு இடம்பெறவிருந்த கட்டட தொகுதியில் தீ

மட்டக்களப்பு அரசடி பிரதேசத்திலுள்ள மண்டப கட்டட தொகுதி ஒன்றில் இன்று வியாழக்கிழமை தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இவ் மண்டபத்தினுள் சிறிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதனையடுத்து மண்டபத்தினுள் தீப்பிடித்த எரிந்ததாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனையடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொலிசாரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இத் தீவிபத்தினால், மண்டபத்தின் மேடைப்பகுதி திரைச்சீலைகள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன.

மண்டபம் அமைந்துள்ள கட்டடத்தில், மக்கள் வங்கி, மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகம், பலநோக்கு அபிவிருத்தி சபை உள்ளிட்ட பல முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசியமாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த இவ் மண்டபம் தீப்பிடித்து எரிந்தமை குறித்து பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்படடுள்ளன.

தமிழரசுக்கட்சியின் மாநாட்டை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பழைய செயற்குழு கூட்டம், புதிய செயற்குழு கூட்டம், புதிய செயற்குழு தெரிவுக் கூட்டங்கள் என்பன மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளன.

இந்த மாநாடு இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக செயற்குழுவில் தெரிவு செய்யப்படும் தலைவரின் தலைமையிலேயே நடைபெறவுள்ளது. தேசிய மாநாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவருமான இரா.சம்பந்தன் பேருரையை நிகழ்த்தவுள்ளார்.

இந்த நிலையில், தேசிய மாநாடு இடம்பெறவிருந்த மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் புகைமண்டலமாகக் காணப்பட்டது.

இந்த மாநாட்டுக்கு எதிராக மட்டக்களப்பில் பல எதிர்ப்பு துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், இது தமது மாநாட்டை குழப்புவதற்கான திட்டமிட்ட செயற்பாடாக இருக்கலாம். ஆனால் எத்தகைய தடைகள் வந்தாலும் தமது தேசிய மாநாடு திட்டமிட்படி நரடைபெறும் எனத் தெரிவித்தார்.

அதே நேரம் எங்களது மாநாடு நடைபெறாமல் போனாலோ அதற்காக தடைகள் ஏற்பட்டாலோ அதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார்.

-adaderana

Published by

Leave a comment