ஏனைய சமூகங்களை பாதிக்காதவாறு தமிழ் மக்களுக்கான தீர்வு அமைய வேண்டும்: றிசாட்

தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும். எனினும், குறித்த தீர்வு ஏனைய சமூகங்களை பாதிக்காதவாறு அமைய வேண்டும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஊடகவியலாளர் மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவளிக்காமையினால் வட மாகாணத்திலிருந்து பல வந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள், தமிழ் தலைவர்கள் மற்றும் தமிழ் ஊடகங்கள் ஆதரவளிக்க வேண்டும்.

இந்த மீள்குடியேற்ற விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாரிய பொறுப்புள்ளது. வட மாகாண முஸ்லிம்கள் விடுதலை புலிகளினால் வெளியேற்றப்பட்டபோது அவர்களின் குரலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது.

முஸ்லிம்களின் சொந்த காணிகளிலே அல்லது அரச காணிகளிலேயோ வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள்குடியேற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மத தலைவர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது எந்த வகையில் நியாயம்?

புனர்வாழ்வு அமைச்சராக நான் செயற்பட்ட போது, தமிழ், முஸ்லிம் என்ற பாரபட்சம் காட்டாமல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உதவி செய்தேன்.

எனது வாக்கு வங்கிக்கான இந்த உதவிகளை நான் ஒரு போதும் செய்யவில்லை. இதேபோன்று வட மாகாண முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும்.

கடந்த 22 வருடங்களுக்கு முன்னர் வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை ஒரு மணித்தியாலத்திற்கு மீள்குடியேற்றி விட முடியாது. காடுகள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றி மீளக்குடியேற்ற கால நேரங்கள் தேவைப்படும்.

எவ்வாறாயினும் இந்த வருட இறுதிக்கு வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்டவர். இதற்கான உறுதிமொழிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Published by

Leave a comment