அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திடம் அறிக்கை சமர்ப்பிப்பு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு அடங்கிய அறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் கையளிக்கப்பட்டதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த அறிக்கையை நேற்றையதினம் சமர்ப்பித்ததாக கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பாக ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிலைப்பாட்டை ஜனாதிபதி கேட்டிருந்தார். இதற்கமைய எமது கட்சியின் நிலைப்பாட்டை நாம் கையளித்துள்ளோம்.

சட்டத்தரணி ஷஹீட் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர், உனைஸ் பாரூக் மற்றும் அமீர் அலி உள்ளிட்ட குழுவினர் இதுதொடர்பில் ஆராய்ந்து இந்த அறிக்கையைத் தயாரித்திருந்தனர்.

பயங்கரவாத யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் தமது காணிகளுக்குச் செல்ல முடியாத நிலையிலும், அங்கு சென்று வாழமுடியாத நிலையிலும் உள்ளனர்.

இவர்களின் காணிவிவகாரம் குறித்து ஆராய்வதற்கு செயலணிக் குழுவொன்றை அமைக்க வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவில் ஆராயப்படாத முஸ்லீம்களின் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெறும் அரசாங்க வேலைவாய்ப்புக்களில் இனவிகிதாசாரம் பேணப்பட வேண்டும் போன்ற முக்கிய விடயங்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் குறித்த எமது நிலைப்பாட்டை நாம் எமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட தலைவர் என்.எம். ஷஹீட், கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Published by

Leave a comment