களனி ஆற்றில் 24 கரட் தங்கம்

சந்தை விலைக்கு தான் கொள்வனவு செய்ததாக கூறுகிறார் தங்க வியாபாரி

களனி ஆற்றில் பூகொடை குமாரிமுல்லை ஜம்புத்துறையில் தங்கத் துகள்கள் கண்டறியப்பட்டதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆற்றில் தங்கம் தேடுகின்றனர். நேற்று அப்பகுதிக்கு சென்ற புவியியல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளும் மாணிக்கக் கல் அதிகார சபை உறுப்பினர்களும் தங்கம் தேடுதலில் ஈடுபட்டுள்ளோருடன் உரையாடினர்.

பின் இவ்வதிகாரிகள் இப்பிரதேச தங்க வியாபாரிகளுடனும் கலந்துரையாடினர்.

புவியியல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், கனிய வளங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்குச் சொந்த மானவை. களனி ஆற்றில் தங்கத் துகள்கள் கிடைப்பது இதுவே முதற் தடவை.

இப்பணியில் ஈடுபடுவோர் பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் பாரம்பரிய முறைகளையே கையாள்கின்றனர். மேலும் இரசாயனப் பதார்த்தங்களைக் கொண்டு தங்கத்தை வேறுபடுத்தும் முறையினை கையாளவில்லை என்பதனால் சூழல் மாசடைதலும் ஏற்படவில்லை. இதன் காரணமாக நாம் இதைத் தடை செய்யவில்லை என்று கூறினார்கள்.

மாணிக்கக் கல் அதிகார சபை உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில் தங்கம் தேடுவதாகக் கூறி, ஆற்றில் மாணிக்கம் அகழ்கின்றனரா என்பதைப் பரிசோதிப்பதற்கே தாம் வந்ததாகவும் இங்கு அவ்வாறு இடம்பெறவில்லை என்றும் கூறினார்.

இங்கு கருத்து தெரிவித்த தங்க வியாபாரியான பூகொடை லகி கோல்ட் ஹவுஸ் உரிமையாளர் எல். ஐ. ஏ. எம். ஸப்வான் ஒரு சில நாட்களாக நாலைந்து பேர் அடங்கிய குழு தங்கத் துகள்களைச் சேகரித்து கொண்டு வந்து காண்பிப்பதாகவும் அவற்றை பரீட்சித்துப் பார்த்த போது அவை இருப்பதினான்கு கரட் தரம் வாய்ந்தவை என்பதனால் அவற்றை தாம் சந்தை விலைக்குப் பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

-தினகரன்

Published by

Leave a comment