‘குறிப்பாக புகையிரத நிலையங்களில் மேற்கொள்ளப்படும் அறிவித்தல்களை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மேற்கொள்வதற்கும், பொலிஸ் நிலையங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் அல்லது தமிழ் பேசக்கூடிய சிங்கள அதிகாரிகளை பணிக்கு அமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்’.
சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங் களிலும் மொழிப் பிரச்சினை களைக் கையாள்வதற்கு சமூக மேம்பாட்டு உதவுனர்கள் நியமிக்கப்படவிருப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணய கார தெரிவித்தார்.
கூடிய விரைவில் அனைத்து மாவட் டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும், இவர்களுக்கு மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ராஜகிரியவிலுள்ள அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் மொழிரீதியான நல்லிணக்கம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் நிலையில், மக்களுக்கிடையில் மொழிகள் மூலம் சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயகார, அனைத்து அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் மொழிமூலமான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அமைச்சின் பிரிவுகளும், தேசிய மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிகள் திணைக்களம், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியன இணைந்து பணியாற்றி வருகின்றன.
அரச மொழிகளான தமிழ் மற்றும் சிங்கள மொழிகளைக் கற்பிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கண க்கான அரசாங்கப் பணியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இவ்வாறு மொழிப் பயிற்சி பெற்ற அரசாங்கப் பணியாளர்கள் அவற்றைத் தமது பணியின் போது பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதுடன், பரீட்சைகள் மூலம் அவர்களின் மொழி ஆற்றல்களை அறிந்துகொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களில் மும்மொழிப் பயன்பாட்டை வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாக புகையிரத நிலையங்களில் மேற்கொள்ளப்படும் அறிவித்தல்களை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மேற்கொள்வதற்கும், பொலிஸ் நிலையங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் அல்லது தமிழ் பேசக்கூடிய சிங்கள அதிகாரிகளை பணிக்கு அமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு பொலிஸ்மா அதிபரின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.
மொழிப் பயிற்சி மாத்திரமன்றி வடக்கு, கிழக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடமாடும் சேவைகள் பலவும் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கு அமைய நாட்டில் 30 இடங்கள் மும்மொழி வலயங்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் அங்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மொழிரீதியான நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Leave a comment