எகிப்து ஜனாதிபதி தேர்தல் இன்று ஆரம்பம்: முபாரக்கின் இடத்திற்கு 13 வேட்பாளர்கள் போட்டி

இஸ்லாமிய மற்றும் மத சார்பற்ற வாக்குகள் சிதற வாய்ப்பு

 ஹொஸ்னி முபாரக் பதவி விலகியதன் பின்னர் எகிப்தில் முதலாவது ஜனாதிபதி தேர்தல் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் 13 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

இரு தினங்கள் நடைபெறவுள்ள இந்த தேர்தலில் ஒரு வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெறாதபட்சத்தில் இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்படவுள்ளது. இரண்டாவது சுற்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெறும்.

எகிப்து மக்கள் எழுச்சிக்கு பின்னர் அந்நாட்டின் ஆட்சி மாற்றத்தில் ஜனாதிபதி தேர்தல் தீர்க்கமாக கருதப்படுகிறது. இதில் இஸ்லாமியவாதிகள், மிதவாதிகள் மற்றும் முபாரக் அரசின் முக்கிய பிரமுகர்கள் என வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

எனினும் எகிப்தின் புதிய ஜனாதிபதி நாட்டில் நிலவும் வறுமை, வேலையின்மை, ஊழல், பாதுகாப்பு பிரச்சினை என பல சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் அரசியல் யாப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்படாத நிலையி லேயே எகிப்தின் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. எகிப்தின்புதிய அரசியல் யாப்பை அமைப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறியாலேயே இந்த நிலை ஏற்பட்டுள் ளது.

எகிப்து அரசியல் யாப்பை அமைப்பதற் காக அந்நாட்டு பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட சட்டவாக்க சபையை நீதிமன்றம் இடைநிறுத்தியதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் யாப்புக்கான வரைபு எழுதப்பட்டிருக்க வேண்டும் என ஆளும் இராணுவ கவுன்ஸில் அறிவித்துள்ளது. எனினும் அது சாத்தியமில்லை என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் புதிய ஜனாதிபதிக்கான உச்ச தவணைக்காலம் நான்கு ஆண்டுகள் கொண்ட இரண்டு தவணைகளாக வரையறுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசாரத்திற்காக சராசரியாக 1.6 மில்லியன் டொலர்களே செலவு செய்ய முடியும் எனவும் அதில் வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்த முடியாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக எகிப்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 23 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கான உயர் சபை கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி 10 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தது.

இதில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அரசின் உளவுப் பிரிவு தலைவராகவும் துணை ஜனாதிபதியாகவும் இருந்த உமர் சுலைமான், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பிரதான வேட்பாளர் கைரத் அல் ஷாதிர் மற்றும் சலபி ஆதரவு வேட்பாளர் ஹஸம் அபு இஸ்மைல் ஆகியோருக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

எகிப்தில் மக்கள் எழுச்சி மூலம் கடந்த ஆண்டு பெப்ரவரியில் ஹொஸ்னி முபாரக் பதவி நீக்கப்பட்டதன் பின்னரும் அங்கு அடிக்கடி ஆர்ப்பாட்டங்களும் கலவரங்களும் இடம்பெற்று வருகின்றன. முபாரக் அரசுக்கு பின்னர் ஆட்சியில் இருக்கும் இராணுவ கவுன்ஸிலுக்கு எதிராகவே அங்கு அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

எனினும் எகிப்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் அண்மையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று ஆரம்பமாகும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பது குறித்து அண்மையில் இடம்பெற்ற கருத்து கணிப்புகள் யாருக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது என்பதை அனுமானிக்க உதவுகிறது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பிரதான வேட்பாளர் ஷாதிர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமியவாதிகளின் ஆதரவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கருத்து கணிப்புகள் குறிப்பிடுகின்றன.

எகிப்தில் மிகப்பெரிய பிரசார சக்தி கொண்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஷாதிரைத் தொடர்ந்து அதனது மாற்று வேட்பாளரான மொஹமட் மொர்சியை பிரதான வேட்பாளராக நிறுத்தியுள்ளது. எனினும் கடும் போக்கு இஸ்லாமிய வாதிகளான சலபிக்கள் தமது ஆதரவை மற்றுமொரு இஸ்லாமியவாதியான அப்துல் மொனைம் அபுல் பதுவுக்கு வழங்கியுள்ளனர்.

முன்னாள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினரான அபுல் பதுவுக்கு இன்று ஆரம்பமாகும் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவு ஆதரவு உள்ளதாக நம்பப்படுகிறது. எனினும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னிலை பெற்ற முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஜனாதிபதித் தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.

அதேபோன்று மதசார்பற்றோருக்கு இடையிலும் பிரதானமாக பிளவு ஏற்பட்டுள்ளது. இதில் முபாரக் அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த ஆம்ர் மூஸா மற்றும் பிரதமர் அஹமட் ஷபீக் ஆகியோருக்கிடையில் மத சார்பற்றோர் வாக்குகள் சிதற வாய்ப்பு உள்ளது.

எவ்வாறாயினும் எகிப்து ஜனாதிபதியாக தெரிவாகுபவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல சவால்களை எதிர்நோக்க வேண்டி வரும். உள்நாட்டில் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டிய நிர்ப்பந்தம் புதிய ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக எகிப்தில் 40 வீதத்திற்கும் மேலானோர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். தற்போதைய அரசியல் ஸ்திரமின்யால் வெளிநாட்டு நிதியுதவி வருவதிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தவிர, சர்வதேச அளவில் அரபு நாடுகள் மற்றும் மேற்கு நாடுகளுடனான எகிப்தின் உறவில் ஒரு சமநிலையை பேணும் கட்டாயம் புதிய ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் எகிப்தின், இஸ்ரேலுடனான உறவு குறித்த வரையறையை நிர்ணயிக்கும் பொறுப்பும் தேர்வாகவுள்ள புதிய ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று வளைய நாடுகளான ஆபிரிக்க நாடுகளுடனும் எகிப்து நல்லுறவை பேண வேண்டும்.

-Thinakaran

Published by

Leave a comment