தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மிக விரைவில் பொறியியல் பீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 7வது பொதுப் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (19) ஒலுவில் வளாகத்தில் வேந்தர் பேராசிரியர் அச்சி எம். இஸாக் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் திஸாநாயக்க மேற் கண்டவாறு கூறினார்.
அமைச்சர் திஸாநாயக்க அங்கு தொடர்ந்து தனதுரையில்; 1995ல் பல்கலைக்கழகக் கல்லூரியாக மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம். அஷ்ரபின் முயற்சியினால் றிச்சட் பத்திரன கல்வியமைச்சராக இருந்த காலத்தில் இப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வரும் இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி பெரிதும் பாராட்டத்தக்கது. இதன் ஒவ்வொரு துளிப் பெருமைக்கும் நன்றிக்கும் உரியவராக மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் திகழ்கின்றார்.
சமூக ஒருமைப்பாட்டையும் சமாதான விழுமியங்களையும் கட்டியெழுப்பும் வகையில் செயற்படுகின்ற இப்பல்கலைக் கழகமானது தேசிய ரீதியில் முன்னணி வகிக்கின்றது. இப் பல்கலைக் கழகத்தை மிகத்தரம் வாய்ந்த ஒரு காலாசாலையாக முன்னேற்றுவதற்கு தற்போதைய உபவேந்தர் பல்வேறு கனவுகளுடன் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். அவரது முயற்சியின் விளைவாகவே இங்கு விரைவில் பொறியியல் பீடம்உருவாகவுள்ளது.
உலகமயமாக்கம் காரணமாக ஒவ்வொரு துறைகளிலும் போட்டிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சவால் மிக்க உலக செயற்பாடுகளுக்கு மத்தியில் பல்கலைக்கழகங்களினது பங்கு மிகப் பெறுமதிவாய்ந்தவை. இவை பல துறைகளிலும் பிரசித்திபெற்ற அறிவாளிகளை உருவாக்குகின்றன.
இன்று, தெற்காசிய நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக ஆசிய நாடுகளின் அபிவிருத்தியடைந்த நாடுகளின் முன்னேற்றத்தைக் குறிப்பிடலாம். இதற்கு அந்நாடுகளினது உயர் கல்வித்துறை பெரும் பங்காற்றி வருவதை நாம் காண்கின்றோம்.
அந்த வகையில், இன்று பட்டம் பெறுகின்ற பட்டதாரிகள் பல்வேறு துறைகளிலும் ஆர்வத்துடன் செயற்பட்டு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதுடன் நவீன உலக செயற்பாடுகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் தங்களை அனுபவ ரீதியாக தயார் படுத்த முன்வருவதுடன் எதிர்கால தலைவர்களாக உருவாக வேண்டும் எனவும் கூறினார்.
இவ்விழாவில் ஸ்தாபக உபவேந்தர் எம்.எல்.ஏ. காதர் இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். இங்கு உள்வாரியாகப் பட்டம் பெற்ற 421 பட்டதாரிகளுக்கு பிரயோக விஞ்ஞானம், வர்த்தக முகாமைத்துவம், கலை கலாசாரம், இஸ்லாமிய கற்கைகள், அறபு மொழி ஆகிய துறைகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். முகம்மது இஸ்மாயில், உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்தின, பதிவாளர் எச். அப்துல் சத்தார், நிதியாளர் குலாம் றசீத் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள், திணைக்களங்கள், நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Leave a comment