டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏற்ற சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள 18 பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக வழக்குத் தொடருவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மே மாதத்தில் டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்பாக கம்பஹா மாவட்டத்தில் நடாத்திய ஆய்வின் அடிப்படையிலேயே இப்பாடசாலைகளுக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்வதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
மே மாதத்தில் டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்பாக கம்பஹா மாவட்டத்தில் 25 தனியார் நிறுவனங்களும், 27 பாடசாலைகளும், 100 வீடுகளும் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில் 18 பாடசாலைகளும், 59 வீடுகளும் டெங்கு நுளம்புகள் பல்கி பெருகுவதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டிருக்கின்றது.
டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிருந்த இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருக்கின்றார்.
டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் விரிவான அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தும் கூட அவற்றை சிறிதளவேனும் பொருட்படுத்தாமல் சிலர் நடந்து கொள்வது கவலை அளிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட் டுள்ளார்.
ஆகவே இப்படியானவர்களுக்கு எதிராக வேறுபாடு பாராமல் கடும் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கூறியுள்ளார். அதன் அடிப்படையிலேயே இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றது.
-Thinakaran
Leave a comment