விசித்திரமான எரிபொருள் இறக்குமதியும் இழக்கப்படும் பல கோடி ரூபாய்களும்!

‘இந்த எண்ணெய் இறக்குமதியால் நாட்டுக்கு 14 கோடி நட்டம். அமைச்சர் கூறும்படி குறித்த இறக்குமதி நிறுவனத்தில் இருந்து கிடைத்த கழிவின் பின்னரும் 10 கோடி ரூபா நட்டம். கடந்த வருடம் தரமற்ற பெற்றோல் இறக்குமதியால் 49 கோடி ரூபா நட்டம்’

விமானத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை கொண்டு குப்பி லாம்பு எரியவைக்கும் அபிவிருத்தி அடைந்த நாடு இலங்கை மாத்திரமே என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அக்குரஸ்ஸையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“சிங்கப்பூரில் இருந்து விமானத்திற்கு பயன்படுத்தும் எண்ணெய் இறக்குமதி செய்தனர். இலங்கையில் அதனை திறந்து பார்க்கும்போது அது தரமற்றது என தெரியவந்தது. எனவே குறித்த எண்ணெயை மண்ணெண்ணைக்கு பதிலாக பயன்டுத்தலாம் என்று தீர்மானம் ஒன்றை எடுத்தனர். இனி லாம்பு எரியவைக்கும் போது கவனம்! மேலே பறந்தாலும் பறக்கலாம்.

இந்த எண்ணெய் இறக்குமதியால் நாட்டுக்கு 14 கோடி நட்டம். அமைச்சர் கூறும்படி குறித்த இறக்குமதி நிறுவனத்தில் இருந்து கிடைத்த கழிவின் பின்னரும் 10 கோடி ரூபா நட்டம். கடந்த வருடம் தரமற்ற பெற்றோல் இறக்குமதியால் 49 கோடி ரூபா நட்டம்.

இவற்றை யார் செலுத்துவது? யார் இவற்றுக்கு பொறுப்புக்கூறுவது? இன்னும் கொஞ்ச நாளில் எரிபொருள் விலையை அதிகரித்து மக்களின் தலையில் இந்த சுமையை அரசாங்கம் ஏற்றி வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை”.

இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து கருத்து வெளியிட்ட ரில்வின் சில்வா,

“இன்று தமிழ் மக்கள் என்ன கேட்கின்றனர். அதிகாரத்தை பகிரச் சொல்லவில்லை. 13ம் திருத்தத்தை கோரிவில்லை. 13 பிளஸ் பிளஸ் அதனையும் கோரவில்லை.

அண்மையில் இலங்கை வந்த இந்திய குழு வடக்கு கிழக்கு பகுதிக்குச் சென்றது. மெனிக்பாம் முகாமிற்குச் சென்றது. அங்கு முகாமில் உள்ள அகதி மக்கள் கூறியது என்ன?

´எங்களுக்கு எங்கள் காணிகளைத் தாருங்கள், ´எங்களை மீள்குடியேற்றுங்கள், சுதந்திரமாக இயங்க சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துங்கள், தொழில் புரிய வசதி செய்து தாருங்கள்´ இவ்வாறு தான் கேட்டனர்.

ஆனால் ,அரசாங்கம் அந்த மக்களின் சாதாரண கோரிக்கையை நிறைவேற்றாமல் அமெரிக்காவின் தேவைக்கு, இந்தியாவின் தேவைக்கு ஏற்ப அதிகாரத்தை பகிர முயற்சிக்கிறது. ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்கேற்ப அரசு செயற்படுகிறது.

இதனை நிறைவேற்ற பாராளுமன்ற தேரிவுக் குழுவொன்றை அரசாங்கம் அமைத்து அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் வரமாட்டோம் என்று கூறினர். ஐக்கிய தேசியக் கட்சியும் அவ்வாறே கூறியது. மக்கள் விடுதலை முன்னணி தீர்க்கமாகவே கூறிவிட்டது.

ஆனால் அண்மையில் அதிகாலையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியை சந்தித்து கோப்பி குடிக்கச் சென்றார். இவர்கள் இருவரும் இணைந்து கோப்பி குடித்தால் நாட்டுக்கு அழிவுதான். பேச்சுவார்த்தை முடிந்ததும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்துக் கொண்டு வருவதாகவும் ஜனாதிபதிக்கு வாக்குறுதி அளித்துவிட்டு வந்துள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியையும் அழைக்க முயற்சிக்கின்றனர்”.

இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

Published by

Leave a comment