முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாக சபைத் தெரிவு மீண்டும் குழப்பத்தில் முடிவு!!

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கருத்துக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நவவியும் செயற்பட்டதாகக் குற்றச்சாட்டு!

ஜமாஅத்தார் சங்கம் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கப் போவதாகவும் அறிவிப்பு!!!

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திpணைக்களத்தினால் இன்று 18ம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டவாறு நடைபெறவில்லை. இன்றும் குழப்பமே முடிவாக அமைந்தது.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் பிரதேச சுகாதாரப் பணிப்பாளரிடம் ஏற்கனவே இரகசியமாகத் தெரிவித்திருந்தவாறே தேர்தலை நடாத்த வந்த மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் நவவி அவர்களும், அதிகாரிகளும் வாக்கெடுப்புக்கு என ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் வேட்பாளர்களுடனும், ஜமாஅத்தார்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி காலத்தைக் கடத்தியதன் மூலம் வாக்கெடுப்பு நடைபெறாமல் தமது கடமையைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இன்று 18ம் திகதி வெள்ளிக்கிழமை இத்தேர்தலை நடாத்துவதற்காக கொழும்பிலிருந்து மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் நவவி அவர்களின் தலைமையிலான குழுவினர் காத்தான்குடிக்கு வருகை தந்தனர்.

இன்று பிற்பகல் 02:00 மணி தொடக்கம் 04:00 மணி வரை வாக்களிப்புக்கான நேரம் வரையறுக்கப்பட்டிருந்தது. எனினும் பி.ப. 2.25 மணியளவில் பள்ளிவாசலின் மேல்மாடிக்கு ‘வார உரைகல்’ சென்றபோது அங்கு பணிப்பாளர் நவவி வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்.

அங்கு காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் முக்கியஸ்தர்களான முன்னாள் செயலாளரும், காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமி, பிரதிச் சௌலாளர் ஏ.பி.எம். சாதிக்கீன், ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எம். ஹிலுறு, முன்னாள் நகரசபை உறுப்பினர் ஏ.எம். ஹயாத் போன்றவர்களும் அப்பகுதிக்கான கிராம உத்தியோகத்தர் வை.எல்.எம். இப்றாஹீமும் வேட்பாளர்களும் சமூகமளித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

அவரது அறிவுரை முடிவடைந்ததும் இப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்களுடனும் பணிப்பாளர் சில நிமிடங்கள் உரையாட வேண்டும் என தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் காத்தான்குடி நிலையத்தில் பணியாற்றும் றிஸ்வி என்பவர் வேண்டுகோளொன்றை விடுத்தார்.

அதற்கமைய வேட்பாளர்கள் அனைவரையும் மேல் மாடியிலேயே அமர்ந்திருக்குமாறு பணிப்பாளர் பணித்து விட்டு கீழே இருந்த ஜமாஅத்தார்களைச் சந்திக்க கிராம உத்தியோகத்தருடன் வந்தார்.

ஜமாஅத்தார்களும், ஜமாஅத்தார் அல்லாதோருமாக கீழ்த்தளத்தில் நிறைந்திருந்தவர்களுடனான சந்திப்பை ஆரம்பித்து கிராம உத்தியோகத்தர் வை.எல்.எம். இப்றாஹீம் உரையாற்றுகையில், கடந்த காலப் பிரச்சினைகளை இங்கே விவரிக்காமல் தேர்தல் தொடர்பான கருத்துக்களை மாத்திரம் சுருக்கமாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து இப்பள்ளிவாசலின் முன்னாள் நிர்வாகியான ஜனாப். அன்வர் முறாத் என்பவர், ‘காத்தான்குடி வரலாற்றிலேயே இவ்வாறு பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கு தேர்தல் நடாத்தப்படவில்லையென்றும், இன்று இவ்வாறு தேர்தலை நடாத்தினால் பின்னர் அதுவே இவ்வூரில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகவும் ஆகிவிடுமென்றும், அதனால் தேர்தலுக்காக நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ள 54 வேட்பாளர்களையும் நிர்வாகிகளாக நாம் அங்கீகரிப்போம்’ என்றும் கூறினார்.

அவரது இக்கருத்தை அங்கிருந்த சக்காப் என்பவரும் ஆதரித்தார்.

ஜமாஅத்தார் சங்க உறுப்பினரான றஸாக் என்பவர் இதனை மறுத்து அங்கு கருத்துத் தெரிவித்தார். அவர், ‘இணக்கமான முறையில் ஒரு நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்காக எமது ஜமாஅத்தார் சங்கம் கடந்த ஆறு மாத காலமாக பலதரப்பட்ட முயற்சிகளையும் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டோம். அவை அனைத்தும் தோல்வியடைந்ததன் காரணமாகவே இறுதிக்கட்டமாக தேர்தல் மூலம் நிர்வாக சபையொன்றைத் தெரிவு செய்வதற்கு நாங்களும் நீங்களுமாக முடிவுக்கு வந்தோம். எனவே வாக்கெடுப்பு மூலம் நிர்வாகிகளைத் தெரிவு செய்யுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து ஜமாஅத்தார் சங்க உறுப்பினரும், முன்னாள நகர சபை உறுப்பினருமான் எம்.எம். கலந்தர் லெப்பை தனது கருத்தைத் தெரிவித்தார். அவரும் வாக்கெடுப்பின் மூலமாகவாவது இன்றுடன் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தினார்.

அவரைத் தொடர்ந்து ஜமாஅத்தார் சங்க உறுப்பினரும், ஜாமிஅதுஸ் ஸித்தீக்கிய்யா மகளிர் அறபுக் கல்லூரி அதிபரும், முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான அல்ஹாஜ் எஸ்.எம்.பி. முகைதீன் அங்கு பேசினார்.

அவர், ’54 வேட்பாளர்களையும் நிர்வாகிகளாக நியமிப்பதற்கு இப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்க யாப்பு இடமளிக்காது. அவ்வாறு 54 வேட்பாளர்களையும் நிர்வாகிகளாகத் தெரிவு செய்ய வேண்டுமாயின் முதலில் 14 நாள் முன்னறிவிப்புக் கால அவகாசத்தில் யாப்புத் திருத்தத்துக்கான கூட்டமொன்றை நடாத்த வேண்டும். அதனை இந்தக் கூட்டத்தில் செய்ய முடியாது. எனவே நீங்கள் அறிவித்தவாறு தேர்தலை நடாத்தி யாப்பு விதிக்கமைவான நிர்வாகிகளைத் தெரிவு செய்யுங்கள்’ எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பணிப்பாளர் நவவி அவர்கள் கூடியிருந்தோர் மத்தியில் பேசினார். அவர் தனதுரையில், ‘நாங்கள் தேர்தல் ஒன்றை நடாத்தி இப்பள்ளிவாசலுக்கான நிர்வாக சபையொன்றைத் தெரிவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளுடனும்தான் வந்துள்ளோம். நீங்கள் அனைவரும் ஒருமித்து அவ்வாறு தேர்தல் ஒன்று வேண்டாம் என்று கூறினால் மாத்திரமே நாம் எமது நடவடிக்கையைக் கைவிடுவோம். ஒருவர் என்றாலும் தேர்தல் நடாத்தவே வேண்டும் எனக் கூறினால் நாம் தேர்தலை நடாத்துவோம். அதற்காக பொலீசாரும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இங்கு வந்துள்ளனர். அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் யாராவது நடந்தால் அவர்களைக் கைது செய்து தடுத்து வைப்போம்’ என்றார்.

மேலும் பேசிய அவர், ‘பள்ளிவாசலுக்கு நிர்வாக சபையொன்றைத் தெரிவு செய்ய வேண்டுமென்பது அல்குர்ஆனின் கட்டளையாகும். எனினும் அத்தெரிவுக்குரிய கடைசி வழிதான் இவ்வாறான இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதாகும். உண்மையில் ஒரு பள்ளிவாசலின் ஜமாஅத்தார்கள் ஒற்றுமைப்பட்டும், விட்டுக் கொடுப்புகளுடனும்தான் அழ்ழாஹ்வின் வீட்டுக்குரிய நிர்வாகிகளைத் தெரிவு செய்ய வேண்டும். இவ்வாறு வாக்கெடுப்பொன்றின் மூலம் நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுவதை எனது தனிப்பட்ட கருத்தின்படி நானும் விரும்பவில்லை. எனினும் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கமைவாக ஒரு அரச திணைக்களத்தின் பணிப்பாளர் என்ற வகையில் எந்த வகையிலும் சமாதானமான தெரிவுக்கு இடமில்லாத பட்சத்தில் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. அதையே நாம் செய்வோம்’ என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆளுக்கொரு கருத்துச் சொல்லும் நமதூர் சம்பிரதாயம் அங்கு தொடங்கியது. பள்ளிவாசலுக்குரிய கண்ணியம் படிப்படியாக மீறப்பட்டு வருவதை அவதானித்த ‘வார உரைகல்’ பள்ளிவாசலில் இருந்து வெளியேறியது.

இதையடுத்து ஜமாஅத்தார் சங்கத்தின் வேட்பாளர் எம்.எம். சுபைதீன் (வேட்பாளர் இலக்கம்: 35) என்பவரை முன்னர் குறிப்பிட்ட றிஸ்வி என்பவர் பள்ளிவாசலினுள்ளே வைத்து தாக்கியதாகவும், தாக்குதலுக்குள்ளான வேட்பாளர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளதாகவும், தமது மற்றொரு வேட்பாளரான எம்.எம். முஹ்ஸீன் ஆசிரியருக்கும் பள்ளிவாசலினுள் வைத்து சக்காப் என்பவர் அச்சுறுத்தல் விடுத்ததாகவும், வீட்டிலிருந்த அவரது மனைவியுடனும் தொலைபேசி மூலம் அவர் தொடர்பு கொண்டு தமது கோரிக்கைக்கு இணங்கி வருமாறு அவருக்குச் சொல்லும்படி அச்சுறுத்தல் விடுத்ததாகவும் ஜமாஅத்தார் சங்கம் தெரிவித்தது.

இந்தக் களேபரங்களினால் அறிவிக்கப்பட்டிருந்தவாறு வாக்கெடுப்பு எதுவும் நடைபெறவல்லை. 54 வேட்பாளர்களையும் நிர்வாகிகளாக நியமிப்பது என்ற கோரிக்கைக்கு ஜமாஅத்தார் சங்கம் இணக்கம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், வேட்பாளர்கள் அனைவரையும் நிர்வாகிகளாக நியமிப்பதற்கு விருப்பமானவர்கள் இருக்கலாம், விருப்பமில்லாமல் வெளியேற விரும்புவேர் வெளியேறலாம் என பணிப்பாளர் நவவி அவர்கள் கூறிய நிலையில் வாக்கெடுப்புக்காக அறிவிக்கப்பட்டிருந்த நேரமும் முடிவடைந்து விட்டதால் ஜமாஅத்தார் சங்க வேட்பாளர்கள் அனைவரும் பள்ளிவாயலை விட்டும் வெளியேறினர். அதையடுத்து ஜமாஅத்தார்களும் பள்ளிவாசலில் இருந்து தமது வீடுகளுக்குத் திரும்பினர்.

இதுதொடர்பில் ‘வார உரைகல்’லிடம் கருத்துத் தெரிவித்த ஜமாஅத்தார் சங்கத்தினர் கூறியதாவது:

‘இன்று தேர்தல் நடாத்தப்படும் என உத்தியோகபூர்வமாக எமக்கும், ஜமாஅத்தார்களுக்கும் முன்னறிவிப்புச் செய்து விட்டு இரகசிய வாக்கெடுப்பை நடாத்துவதற்காக கொழும்பிலிருந்து வந்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரும் அவரது குழுவினரும் தமது கடமையைச் சரியாகச் செய்திருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாமல் வாக்கெடுப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் வேட்பாளர்களோடும், பொதுமக்களோடும் பேச்சுக்களை நடாத்தி காலத்தைக் கடத்தியதுடன் மீண்டும் இப்பள்ளிவாசலுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவும் காரணமாக இருந்து விட்டார்கள். இது கவலைக்கும் கண்டனத்திற்கும் உரியது.’

‘இப்பள்ளிவாசலுக்கான நிர்வாகத் தெரிவு குறித்து ஆரம்பம் முதல் ஜமாஅத்தார்களான எமக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் இடைஞ்சல்கள், அரசியல் தலையீடுகள் அனைத்தையும் நாம் உத்தியோகபூர்வமாக மேற்படி திணைக்களத்திற்கும், காத்தான்குடி சம்மேளனத்திற்கும் தெரிவித்தே வந்துள்ளோம். இதுதொடர்பாக இடம்பெற்ற சகல சமரசப் பேச்சுவார்த்தை முயற்சிகளும் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் தேர்தலை நடாத்தவென இவ்வூருக்கு வருகை தந்த பணிப்பாளர் நவவி அவர்கள் ஆரம்பத்தில் அவராகச் சொன்னதுபோல் ஒருவரல்ல பல ஜமாஅத்தார்கள் தேர்தலை நடாத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போதிலும் அவர் அதனைச் செய்யாமல் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா எமது நடுநிலை உறுப்பினர் டாக்டர் ஜாபீர் அவர்களிடம் ஏற்கனவே கூறியிருந்தவாறு திட்டமிட்டு நேரத்தைக் கடத்தியுள்ளார்.’

‘மாத்திரமல்ல, எமது ஜமாஅத்தார் சங்க யாப்புக்கு முரணாக வேட்பாளர் நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்த 54 பேரையும் நிர்வாகிகளாகக்குவது என்ற கருத்துக்கும் இடமளித்துள்ளார். இதுவும் சட்டப்படி தவறான நடவடிக்கையாகும். எனவே, எங்களுக்கிருந்த இறுதி நம்பிக்கையும் பணிப்பாளர் நவவி அவர்களின் இன்றைய நடவடிக்கையால் சிதைவடைந்து விட்டது. எனவே சட்டத்தின் மூலமாகவே இனி நாம் நீதியை எதிர்பார்க்கவுள்ளோம்’ எனத் தெரிவித்தனர்.

பிந்திக் கிடைத்த தகவலின்படி இப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்களான பைறூஸ் (நிஞ்சா முகவர்) அன்ஸார் (அரிசிக்கடை), பதுர் (தேசிய நீர்வழங்கல் சபை) ஆகிய மூவரும் ஜமாஅத்தார் சங்க டே;பாளரான மௌலவி அல்ஹாஜ் எச்.எம்.எம். அப்துல் வஹ்ஹாப் அவர்களைச் சென்று சந்தித்ததாகவும், இப்பள்ளிவாசலின் முன்னாள தலைவரும், சம்மேளனத் தலைவருமான எம்.ஐ.எம். சுபைர் என்பவர் மீண்டும் இப்பள்ளிவாசலின் தலைவராக வருவதைத் தாங்களும் மனதார விரும்பவில்லை எனத் தெரிவித்ததாகவும், மௌலவி அப்துல் வஹ்ஹாப் அவர்களையே பள்ளிவாசலுக்குத் தலைவராக்க தாங்களும் விரும்புவதாகவும், அதனால் ஜமாஅத்தார் சங்கத்தை ஒரு இணக்கத்திற்கு கொண்டுவர அவரை முயற்சிக்குமாறும் கேட்டுக் கொண்டனராம்.

இதற்கு பதிலளித்த மௌலவி அப்துல் வஹ்ஹாப் அவர்கள், ‘நான் ஜமாஅத்தார் சங்கத்தின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஒரு வேட்பாளனாக நிறுத்தப்பட்டுள்ளேனேயன்றி பள்ளிவாசல் தலைவர் பதவிக்கு வர வேண்டுமென்கிற ஆசையெல்லாம் எனக்குக் கிடையாது. இப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் அமானிதமாக அப்பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தால் அதை நான் இறையச்சத்துடன் பாரமெடுப்பேன். எனவே ஜமாஅத்தார் சங்கம்தான் இதுபற்றியெல்லாம் முடிவெடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தாராம்.

இதுதொடர்பில், சம்மேளன முன்னாள் செயலாளரும், நகரசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமி அவர்களுடன் ‘வார உரைகல்’ தொடர்பு கொண்டு வினவியபோது, தேர்தல் நடாத்தவென முன்னறிவிப்புச் செய்து விட்டு வருகை தந்த பணிப்பாளர் நவவி அவர்களும் குழுவினரும் யாருடைய கருத்துக்களுக்கும் செவி கொடுக்காது குறிப்பிட்ட நேரத்தில் தேர்தலையே நடாத்தியிருக்க வேண்டும் எனக் கூறினார்.

முன்னாள் நகரசபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எம். ஹயாத் ஜே.பி அவர்களிடம் இதுபற்றிக் கேட்டபோது, அவரும் இதே கருத்தையே வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஜனாப் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்களிடம் இதுபற்றிக் கேட்டபோது அவரும் தேர்தலை நடாத்த வந்த அதிகாரிகள் தெர்தலையே நடாத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செயற்படாமல் ஜமாஅத்தார் அல்லாத நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரான உவைஸ் மௌலவி போன்றவர்களின் கருத்தையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு தேர்தலை நடாத்தாமல் சென்றிருக்கக்கூடாது என்றார்.

ஜனாப் எம்.எம். பைறூஸ் அவர்கள் தெரிவித்துள்ள அவர் தொடர்பான செய்திக்கு மறுப்பு

ஜமாஅத்தார் சங்கத்தின் வேட்பாளரான மௌலவி அல்ஹாஜ் எச்.எம்.எம். அப்துல் வஹ்ஹாப் அவர்களைச் சந்தித்து பேசிய விடயத்தில் அப்பள்ளிவாசலின் முன்னாள் நிர்வாகியான ஜனாப் எம்.எம். பைறூஸ் (நிஞ்சா முகவர்) சற்று நேரத்திற்கு முன்னர் ‘வார உரைகல்’லுடன் தொடர்பு கொண்டு …

“தாங்கள் மௌலவி அவர்களைச் சந்தித்து எல்லோரும் இணைந்து இப்பள்ளிவாசலைப் பராமரிப்போம் என்ற அடிப்படையில்தான் நல்லெண்ணத்தோடு பேசியதாகவும், முன்னாள் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். சுபைர் அவர்களின் தலைமைத்துவம் தொடர்பாக தான் எதுவும் அவரிடம் கூறவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

-நன்றி: வாரஉரைகல்

Published by

Leave a comment