இம்முறை ஹஜ் யாத்தி ரையை மேற் கொள்ளும் இலங்கை முஸ்லிம்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் ஐந்து அல்லது ஏழு விமானங்களை விஷேட சேவையில் ஈடுபடுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரதம அலுவலர் ஜி. பி. ஜயசேன ஆகியோருடன் நடாத்திய பேச்சுவார்த் தைகளின் அடிப்படையில் இந்த இணக்கப்பாடு காணப்பட்டிருப்பதாக அரச ஹஜ் குழுவின் இணைத்தலைவரும், பதிலமைச்சருமான ஏ.ஆர்.எம். அப்துல் காதர் நேற்றுத் தெரிவித்தார்.
இம்முறை ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் இலங்கை முஸ்லிம்களுக்கு சீரான விமான போக்குவரத்து சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதன் அவசியத்தை சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போது எடுத்துக் கூறினேன்.
இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அமைச்சர், நான் முன்வைத்த கோரிக்கையில் நியாயம் கண்டார் எனவும் பதிலமைச்சர் அப்துல் காதர் கூறினார்.
இதனடிப்படையில் நேற்று முன்தினம் அமைச்சர் பிரியங்கர ஜயரட்னவையும், ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனப் பிரதம சந்தைப் படுத்தல் அலுவலர் ஜயசேனவை நேற்றும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினேன். இப்பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே 5 அல்லது 7 விமானங்களை ஹஜ்ஜாஜிகளுக்கென விஷேட சேவையில் ஈடுபடுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் என்னுடன் ஹஜ் முகவர்கள் ஐவரும் பங்குபற்றினர். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் இலங்கைக்கு சொந்தமானது. அதில் பயணிக்கவே ஹஜ்ஜாஜிகள் பெரிதும் விரும்புகின்றனர். இவ்விடயத்தையும் இப்பேச்சுவார்த்தை யின்போது சுட்டிக்காட்டினேன் என்றார்.
-Thinakaran
Leave a comment