மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழிற்துறையை தேசியமயமாக்கும் திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கைத்தொழில்துறையை தேசிய மயப்படுத்துவதற்காகவும் மாவட்டத்தில் உள்ள கைத்தொழிலாளர்கள் சிறந்த தொழிற்துறையினை மேற்கொள்வதற்குமான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்குமான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனமும் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடமும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டன.

மட்டக்களப்பு, கல்லடி, கிறின்கார்டின் விடுதியில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி ரி.பிரபாகரன், பல்கலைக்கழகத்தின் முகாமைத்து துறை தலைவர் வ.கனகசிங்கம் உட்பட விரிவுரையாளர்கள் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் எம்.செல்வராசா உட்பட அச்சம்மேளனத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தி கீழ் மட்டத்தில் உள்ள கைத்தொழில் துறையினை உயர் நிலைக்கு கொண்டுசெல்வதற்கான செயற்றிட்டங்களை கிழக்குப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து எதிர்காலத்தில் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல வளங்களும் உள்ள நிலையில் அவற்றின் பயன்பாடுகள் கைத்தொழில் துறையில் மிகவும் குறைவான நிலையில் உள்ளதாகவும் இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மாவட்டத்தில் பொருத்தமான தொழில்துறையினை தெரிவுசெய்வதில் தாம் பல சிக்கல்களை கடந்த காலங்களில் எதிர்நோக்கியதாகவும் தமது வர்த்தகர்களுக்கு சரியான வழிகாட்டிகள் இன்மையே இதற்கு காரணம் எனவும் வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவரால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் தொழிற்துறையினை தெரிவுசெய்யும்போது அவற்றுக்காக வங்கிகளில் கடன்களை பெறும்போது அவற்றின் வட்டிவீதம் தொடர்ச்சியாக அதிகரித்துச்செல்வதால் பல கஸ்டங்களை எதிர்நோக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுனருடன் கலந்துரையாட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் மாவட்டத்தில் உள்ள கைத்தொழிற் துறையாளர்கள் கிழக்குப்பல்கலைகழகத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் தேவையான திட்டங்களை அங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Published by

Leave a comment